×

வதந்தி பரப்பிய விவகாரம்; உம்ராவ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: வட மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக போலி வதந்திகளை பரப்பிய பாஜவை சேர்ந்த பிரசாந்த் பட்டேல் உம்ராவ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் தமிழகத்தில் பீகார் உள்ளிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக போலியான வீடியோக்களை உத்தரப்பிரதேச மாநில பாஜ கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரசாந்த் பட்டேல் உம்ராவ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். உம்ராவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் தன் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றிணைக்க கோரியும், முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்யக்கோரியும் பிரசாந்த் பட்டேல் உம்ராவ் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது உம்ராவ் தரப்பு வாதத்தில்,‘‘தெரியாமல் வீடியோக்களை டிவிட் செய்து விட்டேன். தவறு என தெரிந்தவுடன் அதனை நீக்கி விட்டேன். ,’’ என கூறினார். இதையடுத்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் ஜோசப் அரிஸ்டாட்டில்,\” வேண்டுமென்றே தான் சமூக வலைதளத்தில் வதந்திகளை உம்ராவ் பரப்பியுள்ளார். அவர் ஒரு வழக்கறிஞர் என்பதை தாண்டி ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர். தமிழ்நாட்டில் ஆட்சி செய்யக் கூடியது அவர்களுக்கு எதிரான அரசியல் கட்சி. எனவே அரசியல் நோக்கங்களுக்காக தான் இதனை செய்திருக்கிறார். இதுதொடர்பான வழக்கில் உம்ராவ் ஒரு நாள் கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதைவிட முக்கியமாக அவர் செய்த தவறுக்காக ஒரு மன்னிப்பு கூட தெரிவிக்கவில்லை,’’ என கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள் தங்களது உத்தரவில்,‘‘வழக்கு விசாரணை க்கு பிரசாந்த் பட்டேல் உம்ராவ் ஆஜராகமல் இருப்பது ஏன். குறிப்பாக உம்ராவ் அரசியல் கட்சி உறுப்பினர் மட்டுமின்றி வழக்கறிஞர் என்பதால் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அவர் காலை 10.30 முதல் மாலை 5.30மணி வரையில் தொடர்ந்து 15 நாட்கள் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தேவையில்லை. இருப்பினும் வரும் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உம்ராவ் ஆஜராக வேண்டும். இதைத்தொடர்ந்து விசாரணை அதிகாரிக்கு தேவைப்பட்டால் அவர் மீண்டும் ஆஜராகலாம்.

இல்லையென்றால் அவரது உத்தரவின் படி நடக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து விசாரணைக்காக வரும் 10ம் தேதி தமிழக காவல் நிலையத்தில் ஆஜராகும் போது மன்னிப்பு கேட்பதாக பிரசாந்த் பட்டேல் உம்ராவ் தரப்பில் நீதிபதிகள் முன்னிலையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசும் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

The post வதந்தி பரப்பிய விவகாரம்; உம்ராவ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Umrao ,Supreme Court ,New Delhi ,Bajava ,Prasant Pattel ,northern ,Tamil Nadu ,
× RELATED ஆதார் தகவல்களை கையாள்வதற்கு ஒன்றிய...