×

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; கடைசி நாளிலும் முடங்கியது நாடாளுமன்றம்: தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தது. கடைசி நாளிலும் அமளி நீடித்ததால் இருஅவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கியது. லண்டன் பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆளும்கட்சி எம்பிக்களும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் முற்றிலும் முடங்கியது. கடைசி நாளான நேற்று மக்களவை தொடங்கியதும் கறுப்பு உடை அணிந்த வந்த காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்பிக்கள் அதானி விவகாரம் குறித்து அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினார்கள்.

சபாநாயகர் ஓம்பிர்லா இருக்கைக்கு போக வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்புவதை நிறுத்தவில்லை. இதையடுத்து அவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். நேற்று பிரதமர் மோடி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவைக்கு வந்திருந்தனர். பா.ஜ கட்சி தொடங்கிய தினம் என்பதால் ஆளும்கட்சி எம்பிக்கள் காவி நிறத்தில் துண்டு அணிந்து வந்திருந்தனர். பிரதமர் மோடி அவைக்கு வரும் போது பா.ஜ எம்பிக்கள் ஜெய் ராம் என்று கோஷம் எழுப்பினார்கள். மாநிலங்களவையிலும் இதே நிலை நீடித்தது. இதையடுத்து அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.

அதை தொடர்ந்து அவை கூடியதும் திமுக எம்பி திருச்சி சிவா, காங்கிரஸ் எம்பி சக்தி சிங் கோகில் ஆகியோர் ராகுல்காந்தி பிரச்னை குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கொடுத்த நோட்டீசை நிராகரித்தது குறித்து விளக்கம் கேட்டனர். அதற்கு தன்கர் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார். அது தனது முடிவுக்கு உட்பட்டது என்று தெரிவித்தார். இதையடுத்து அவையில் அமளி ஏற்பட்டது. உடனே அவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார்.

அவர் பேசுகையில்,’ அரசியல் ஆதாயத்திற்காக நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை முடக்குவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது ஒட்டுமொத்த மக்களின் வெறுப்புக்கு ஆளாகிறது. பொதுமக்கள் மத்தியில் அவமதிப்பு, கேலிக்கு ஆளாகிறோம். மக்களின் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் நாம் நடக்க வேண்டும்’ என்று கூறி அமளிக்கு இடையே ஈஸ்டர், புத்த பூர்ணிமா, ஈத் மற்றும் பிற விழாக்களுக்கு வாழ்த்தி சபையை ஒத்திவைத்தார்.

₹50 லட்சம் கோடி பட்ஜெட்; 12 நிமிடத்தில் நிறைவேற்றம்: கார்கே குற்றச்சாட்டு
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தேசிய கொடி ஏந்தி பேரணியை முடித்த பிறகு கூட்டுச்செய்தியாளர்கள் சந்திப்பு கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடந்தது. அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: ஜனநாயகம் பற்றி மோடி அரசு அதிகம் பேசுகிறது. ஆனால் சொல்வதை அது பின்பற்றுவதில்லை. எனவே ஜனநாயகம்,அரசியல் சாசனத்திற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராடுகின்றன. ₹ 50 லட்சம் கோடி பட்ஜெட் வெறும் 12 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அவர்கள் (பாஜ) எதிர்க்கட்சிகளுக்கு எந்த அக்கறையும் இல்லை என்று எப்போதும் குற்றம் சாட்டுகிறார்கள். நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக இப்போதுதான் ஆளும் கட்சியால் அவையில் குழப்பம் ஏற்பட்டது.

நாங்கள் கோரிக்கை வைத்த போதெல்லாம் எங்களை பேச அனுமதிக்கவில்லை. 52 ஆண்டுகால எனது பொது வாழ்வில் இதுவே முதல்முறை. இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்தாமல் முடிப்பதே அரசின் நோக்கமாக இருந்தது. நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் எழுப்பிய பிரச்சனை அதானி விவகாரம் தான். 2 முதல் 2.5 ஆண்டுகளில் அவரது சொத்து ₹12 லட்சம் கோடியாக அதிகரித்தது. இதுபற்றி விசாரிக்க நாங்கள் குரல் எழுப்பினோம். பெரும்பான்மை உறுப்பினர்களை பாஜ பெற்றிருக்கும்போது கூட நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை அமைக்க நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க பயந்து, இங்கிலாந்தில் பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கவனத்தை திசை திருப்பியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராகுலை கண்டு பா.ஜ பதறுகிறது: டி.ஆர்.பாலு பேட்டி
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு கூறுகையில்,’பிரதமர் மோடிக்கு ராகுல் காந்திதான் பிரதான சவாலாக உள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரைக்குப் பிறகு பாஜ பதறுகிறது. ராகுல் காந்தியை கண்டு பயப்படுகிறது. அதனால் தான் அவர்கள் அவை நடவடிக்கைகளை சீர்குலைத்தனர். முதன்முறையாக ஆளும்கட்சி இவ்வாறு நடந்து கொண்டது. அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க இடம் கொடுத்து இருக்க வேண்டும். எதிர்க்கட்சி கூட்டணி இனிமேல் பலப்படும்’ என்றார். பிஆர்எஸ் எம்பி கே கேசவ ராவ் கூறுகையில், ‘ இதற்கு முன்பு எதிர்க்கட்சிகளுக்கு இடையே தூரமும், வேறுபாடுகளும் இருந்தன. ஆனால் இப்போது ஒன்றாக வருகின்றன. எங்களைப் பிரிக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து நாங்கள் பலமாகி வருகிறோம். இன்று நாங்கள் உங்கள் முன் ஒன்றுபட்டுள்ளோம்.

நாளை என்ன நடக்கும் என்பதை தயவுசெய்து விட்டுவிடுவோம், ஏனென்றால் நாங்கள் எப்படி ஒன்றிணைவோம் என்பதைப் பார்க்க நாங்கள் வேலை செய்கிறோம். யார் தலைமை என்பது பிரச்னை இல்லை. ஆனால் ஒரு தேசம் நிச்சயமாக ஒரு நபரால் வழிநடத்தப்படும். இப்போது நாம் அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்கிறோம். நாங்கள் ஒரே பக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்த தேவையான அனைத்தையும் செய்ய முயற்சிக்கிறோம்’ என்றார். ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறுகையில்,’ ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள செய்தி என்ன வென்றால் ஒன்றிய அரசை தாக்கலாம். ஆனால் அதானியை பற்றி யாரும் பேசக்கூடாது என்பது இதன் மூலம் தெளிவாக உள்ளது’ என்றார்.

காங்.எம்பி சஸ்பெண்ட் மழைக்கால தொடர் வரை நீட்டிப்பு
மாநிலங்களவை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடியபோது, ​​அவை தலைவர் ஜெகதீப் தன்கர், அவையை செல்போனில் படம் பிடித்த விவகாரத்தில் பிப்.10ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் எம்பி ரஜனி அசோக்ராவ் பாட்டீல் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை மழைக்கால கூட்டத்தொடரின் முதல் வாரம் வரையிலும் நீட்டிக்கப்பட்டதாக அறிவித்தார். மார்ச் 27 அன்று நடைபெற்ற அவை உரிமைக்குழு குழு கூட்டத்தில் விசாரணையை முடிக்க கால அவகாசம் கேட்டதை அடுத்து மழைக்கால கூட்டத்தொடரின் முதல் வாரம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டதாக தன்கர் தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள்.

எதிர்கட்சி எம்பிக்கள் தேசிய கொடியுடன் பேரணி
எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் வரையில் தேசிய கொடியை ஏந்தி பேரணி சென்றனர். காங்கிரஸ், திமுக, திரிணாமுல், பிஆர்ஸ், சமாஜ்வாதி, ஆர்ஜேடி, சிவசேனா(உத்தவ் பிரிவு), ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரி எம்பிக்கள் இதில் பங்கேற்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியும் இந்த பேரணியில் தேசிய கொடியுடன் பங்கெடுத்தார்.

மக்களவை 45 மணி நேரம்: மாநிலங்களவை 31 மணி நேரம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை 133.6 மணி நேரம் செயல்பட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் 45 மணி நேரம் மட்டுமே நடந்தது. இதே போல் மாநிலங்களவை 130 மணி நேரத்திற்கு பதில் 31 மணி நேரம் மட்டுமே செயல்பட்டது. மக்களவையில் கேள்வி நேரம் 4.32 மணி நேரமும், மாநிலங்களவையில் 1.85 மணி நேரமும் மட்டுமே நடந்தது. பொதுபட்ஜெட் மீதான விவாதம் 14.45 மணி நேரம் மட்டுமே நடந்தது. இதில் 145 எம்பிக்கள் மட்டுமே பங்கேற்று கேள்விகளை எழுப்பினார்கள். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 13 மணி நேரம் 44 நிமிடம் நடந்தது. இதில் 143 எம்பிக்கள் பங்கெடுத்து பேசினார்கள்.

ராகுல்காந்திக்காக நாடாளுமன்றத்தை முடக்கினார்கள்
ஒன்றிய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, பியூஷ் கோயல், இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கூறியதாவது: ராகுல்காந்திக்காக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்தனர். கடைசி நாளில் கூட அவர்கள் கருப்பு உடை அணிந்து மீண்டும் நாடாளுமன்றத்தை அவமதித்தனர். இது நாட்டிற்கு துரதிஷ்டம். நாடாளுமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். ஒரு எம்.பி., ராகுல் காந்திக்காக காங்கிரசும், அதன் ஆதரவாளர்களும் என்ன செய்கிறார்கள் என்பதை, தேசமே பார்த்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக காங்கிரசார் சூரத் நீதிமன்றத்திற்கு எப்படி சென்றனர் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்கள் ஊர்வலம் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு தெரிவித்தனர்.

The post பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; கடைசி நாளிலும் முடங்கியது நாடாளுமன்றம்: தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Parliament ,Amali ,
× RELATED லாயக்கில்லாத எம்பிக்களை அனுப்பி...