×

இரண்டாவது இன்னிங்சில் அயர்லாந்து அமர்க்களம்: டக்கர் 108, மெக்பிரைன் 71*

மிர்பூர்: வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் தோல்வியின் பிடியில் சிக்கியிருந்த அயர்லாந்து கடுமையாகப் போராடி மீண்டதுடன் கணிசமான முன்னிலை பெற்று அசத்தியது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து முதல் இன்னிங்சில் 214 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம், முதல் இன்னிங்சில் 369 ரன் குவித்து ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரகிம் 126 ரன் (166 பந்து, 15 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 87, லிட்டன் தாஸ் 43, மெஹிதி ஹசன் மிராஸ் 55 ரன் விளாசினர். அயர்லாந்து பந்துவீச்சில் பால்பிர்னி 6 விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து, 155 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து, 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 27 ரன் எடுத்திருந்தது. இதனால் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், 3ம் நாளான நேற்று ஹாரி டெக்டர் 8, பீட்டர் மூர் 10 ரன்னுடன் ஆட்டத்தை தொடர்ந்தனர். மூர் 16 ரன்னில் வெளியேற, டெக்டருடன் லோர்கன் டக்கர் இணைந்தார். பொறுப்புடன் பொறுமையாக விளையாடிய இருவரும் 6வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தனர். டெக்டர் 56 ரன் (159 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து தைஜுல் இஸ்லாம் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து லோர்கன் டக்கர் – ஆண்டி மெக்பிரைன் இணைந்து 7வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்ததுடன், கணிசமான முன்னிலை பெறவும் உதவினர்.

அபாரமாக விளையாடிய டக்கர் சதம் விளாசி அமர்க்களப்படுத்தினார். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 111 ரன் சேர்த்தது. டக்கர் 108 ரன் (162 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி எபாதத் உசேன் பந்துவீச்சில் ஷோரிபுல் வசம் பிடிபட்டார். மார்க் அடேர் 13 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 3ம் நாள் ஆட்ட முடிவில், அயர்லாந்து 2வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன் எடுத்துள்ளது. வங்கதேச பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 4, ஷாகிப் ஹசன் 2, எபாதத், ஷோரிபுல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். மெக்பிரைன் 71 ரன் (144 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), கிரகாம் ஹியூம் 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 2 விக்கெட் இருக்க, அயர்லாந்து 131 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று பரபரப்பான 4வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post இரண்டாவது இன்னிங்சில் அயர்லாந்து அமர்க்களம்: டக்கர் 108, மெக்பிரைன் 71* appeared first on Dinakaran.

Tags : Ireland ,Tucker ,McBrien ,Mirpur ,Bangladesh ,
× RELATED மூணாறில் தேர்தல் விழிப்புணர்வு...