×

நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி உற்சவம் குறித்து அறநிலைய துறையிடம் தெரிவிக்கவில்லை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு விளக்கம்

பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, மூவசரம்பட்டு குளத்தில் நடந்த தீர்த்தவாரியில்5 பேர் நீரில் மூழ்கி இறந்தது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது, நீரில் மூழ்கி பலியான 5 பேருக்கும் நிவாரண தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். இதேபோல், விழுப்புரம் மாவட்டம் மயில் முருகர் கோயிலில் நாராயணன் என்ற 45 வயது பக்தர் குளத்தில் குளித்தபோது மூழ்கி இறந்துள்ளார். அவரது குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்து ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். இதேபோல், காங்கிரஸ் செல்வப்பெருந்தகை, பாமக ஜி.கே.மணி, வி.சி.க எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் ராமச்சந்திரன், தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தி ஆகியோரும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.

இதற்கு பதிலளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி நடந்த குளம் கோயில் குளம் அல்ல. அங்கிருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள மூவரசம்பட்டு பஞ்சாயத்தாரால் நிர்வகிக்கப்படும் குளம். இந்த குளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தீர்த்தவாரி நடக்கிறது. 5 பேர் பலியானதால் அவர்களின் பெற்றோர்களின் மனம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். சம்பவத்திற்கு காரணம் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். இப்படி தீர்த்தவாரி நடத்தும் போது ஏன் குளத்தில் தூர்வாரப்படவில்லை என்று என்னை அழைத்து முதல்வர் கண்டித்தார். அறநிலையத்துறையிடம் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கவில்லை என்ற தகவலை கூறினேன். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சத்தை முதல்வர் வழங்கியுள்ளார். வரும் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க, இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும் போது சம்பந்தப்பட்டவர்கள் அறநிலையத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். பலியானவர்கள் குடும்பத்திற்கு எவை எல்லாம் செய்ய முடியுமோ அவை எல்லாம் முதல்வர் செய்து தருவார் என்றார்.

  • பலியானவர்களுக்கு பேரவையில் அஞ்சலி
    பேரவையில் நேற்று அவை தொடங்கியதும், பேரவை தலைவர் அப்பாவு எழுந்து, ‘‘நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரியின் போது 5 பேர் குளத்தில் மூழ்கி இறந்தனர். இந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தோம். 5 பேரின் குடும்பத்தினருக்கு எனது சார்பாகவும், பேரவையின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் இருக்கையில் இருந்து எழுந்து அஞ்சலி செலுத்த வேண்டும்’’ என்றார். இதையடுத்து, உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

The post நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி உற்சவம் குறித்து அறநிலைய துறையிடம் தெரிவிக்கவில்லை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Nanganallur Dharmalingeswarar Temple Tirdwari ,Department of State ,Minister ,P. K.K. Segarbabu ,Opposition Leader ,Edapadi Palanisamy ,Threambathu Pond ,Nanganallur Dharmalingeswarar Temple Dirtiwari ,P. K.K. ,Segarbabu ,
× RELATED இந்தியாவில் சிறுபான்மையினருக்கு...