×

ரயிலில் பெட்ரோல் வீசி தாக்குதல் நடத்தியது ஏன்?.. கைதான ஷாரூக் செய்பி பரபரப்பு வாக்குமூலம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 2ம் தேதி இரவு ஒரு மர்ம ஆசாமி பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் போது உயிருக்கு பயந்து ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த கண்ணூரை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து கோழிக்கோடு ரயில்வே போலீசாரும், கேரள போலீசாரும் விசாரணையை தொடங்கினர். சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே கண்டெடுக்கப்பட்ட ஒரு பேக், போலீசுக்கு ஒரு முக்கிய துப்பாக அமைந்தது. இந்த பேக்கில் இருந்த செல்போனை வைத்து நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியது டெல்லி சகீன்பாக் பகுதியைச் சேர்ந்த ஷாருக் செய்பி (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து கேரள போலீசார் டெல்லிக்கு விரைந்து சென்றனர். அப்போது கடந்த மாதம் 31ம் தேதி ஷாருக் செய்பி காணாமல் போனான் என்றும், இது தொடர்பாக கடந்த 2ம் தேதி அவனது தந்தை பக்ருதீன், சகீன்பாக் போலீசில் புகார் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரயிலில் தாக்குதல் நடத்தியது ஷாருக் செய்பி தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதற்கிடையே மத்திய உளவுத்துறை ஷாருக் செய்பியின் செல்போனை வைத்து நடத்திய விசாரணையில் அவன் மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக உடனடியாக மும்பை தீவிரவாத தடுப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ரத்தினகிரி ரயில்வே ஸ்டேஷனில் வைத்து ஷாருக் செய்பியை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் அவனை கேரள போலீசார் இன்று அதிகாலை கோழிக்கோட்டுக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். அவனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

டெல்லியில் இருந்து மும்பை வரை ரயிலில் வந்த இவன், பின்னர் அங்கிருந்து வேறு ஒரு ரயிலில் கேரளாவுக்கு வந்து உள்ளான். அப்போது அவனுடன் வேறு ஒருவரும் பயணம் செய்து உள்ளார். கேரளாவில் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியதாகவும், அது எந்த ஸ்டேஷன் என்று தனக்குத் தெரியாது என்றும் ஷாருக் செய்பி கூறினான். அதன் பிறகு ஒரு பங்கிலிருந்து 2 பாட்டிலில் பெட்ரோல் வாங்கி கண்ணூர் ரயிலில் ஏறி உள்ளான்.

இதன் பிறகு தான் அந்த ரயிலில் பயணிகள் மீது அவன் தாக்குதல் நடத்தினான். வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்று ஒருவர் கூறியதால் தான் இது போன்ற செயலில் ஈடுபட்டதாக ஷாருக் செய்பி போலீசிடம் வாக்குமூலம் அளித்து உள்ளான். இந்த தாக்குதலின் பின்னணியில் நிச்சயமாக வேறு சிலர் இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post ரயிலில் பெட்ரோல் வீசி தாக்குதல் நடத்தியது ஏன்?.. கைதான ஷாரூக் செய்பி பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Shah Rukh Seibi ,Thiruvananthapuram ,Alappuzha ,Kerala ,Shahrukh Seibi ,
× RELATED சென்னை – ஆலப்புழா ரயிலில்...