×

கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு பின்னால் சிலர் உள்ளனர் என்று ஹரி பத்மன் மனைவி திவ்யா பேட்டி

சென்னை: கலாஷேத்ரா மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த வழக்கில் தோழி வீட்டில் ரகசியமாக பதுங்கி இருந்த பேராசிரியர் ஹரிபத்மனை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. ஒன்றிய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரியில் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பயின்று வருகின்றனர். நடன கல்லூரி என்பதால் கல்லூரியில் ‘இசைக்கு ஏற்றப்படி நடன அசைவுகள்’ கற்றுத் தரப்படுகிறது.

பல நேரங்களில் மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி என்ற பெயரில் பேராசிரியர் ஹரிபத்மன் மற்றும் உதவி நடன கலைஞர்களான சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், நாத் ஆகியோர் பாலியல் தொந்தரவு செய்வதாக மாணவிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், மாணவிகளின் குற்றச்சாட்டு மீது கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்கவில்ைல. இதனால் மாணவிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.

இதை தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கடந்த வாரம் கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் வந்து மாணவிகளிடம் பொது வெளியில் விசாரணை நடத்தினார். தொடர் பாலியல் தொந்தரவு அளித்து வரும் பேராசிரியர்கள் உள்பட 4 பேர் மீதும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தேசிய மகளிர் ஆணைய தலைவர் உதாசீனப் படுத்தியதாக கூறப்படுகிறது.

அதைதொடர்ந்து மாணவிகள் பாலியல் தொந்தரவு அளித்து வரும் 4 பேரை கைது செய்யக் கோரி கல்லூரி வளாகத்தில் இரவு-பகலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி கடந்த வெள்ளிக்கிழமை கலாஷேத்ரா கல்லூரியில் உள்ளிருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது, குற்றம்சாட்டிய 12 மாணவிகளிடம் தனித்தனியாகவும், பேராசிரியரால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் 5 பேரிடம் வீடியோ கால் மூலமும் விசாரணை நடத்தி தகவல்களை பதிவு செய்தார்.

அப்போது மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி பேராசிரியர் ஹரிபத்மன் மூலம் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கோரினார். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு பின்னால் சிலர் உள்ளனர் என்று ஹரி பத்மன் மனைவி திவ்யா தெரிவித்துள்ளார். பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் மனைவி திவ்யா பேட்டி அளித்துள்ளார். போராட்டத்திற்கு பின்னல் உள்ளவர்கள் குறித்து நான் தற்போது பேச விரும்பவில்லை என்று ஹரி பத்மனின் மனைவி திவ்யா பேட்டி அளித்துள்ளர். காவல்துறை வெளிப்படையாக குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உண்மை வெளிவந்தால் என் கணவர் நிரபராதி என தெரியவரும் என தெரிவித்துள்ளர்.

பாலியல் தொல்லை நடந்ததாக கூறப்படும் தேதிக்கு பின்னர் எங்களுடைய குழந்தை பிறந்தநாளுக்கு புகார் தெரிவித்த பெண் வந்தார் என்று ஹரிபத்மன் மனைவி தெரிவித்துள்ளார். என் குழந்தைகளுக்கு அப்பாவை பார்க்க வேண்டும் என்று இருக்கிறது என ஹரிபத்மன் மனைவி கண்ணீர்மல்க பேட்டி அளித்துள்ளார்.

The post கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு பின்னால் சிலர் உள்ளனர் என்று ஹரி பத்மன் மனைவி திவ்யா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Hari Padman ,Divya ,Khalashethra ,Chennai ,Kalashethra ,
× RELATED பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்கள்...