×

தெலங்கானாவில் செகந்திராபாத்-திருப்பதி இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் மோடி 8ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்!!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா மாநிலத்திற்கு வரும் 8ம் தேதி பயணம் மேற்கொள்கிறார்.தெலங்கானாவில் ரூ.11,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ஐதராபாத் தகவல் தொழில்நுட்ப நகரத்தையும், வெங்கடேசப் பெருமாள் உறையும் திருப்பதியையும் இணைக்கும் செகந்திராபாத்- திருப்பதி வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். கடந்த 3 மாதம் என்னும் குறுகிய காலத்தில் தெலங்கானாவில் தொடங்கப்படும்2-வது வந்தே பாரத் ரயில் இதுவாகும். இந்த ரயில் இரு நகரங்களுக்கும் இடையே குறைந்தப்பட்சம் மூன்றரை மணி பயண நேரத்தை குறைக்கும். இது குறிப்பாக பக்தர்களுக்கு பயனளிக்கும்.

ரூ.720 கோடி மதிப்பில், உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் செகந்திராபாத் ரயில் நிலையம் மாற்றியமைக்கப்படவுள்ளது. இதில் அனைத்து பயணிகளுக்கும் தேவையான வசதிகள், பயணிகள் ரயில்களுக்கு மாறும் வசதிகள் அமைக்கப்படும்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் ஐதராபாத்-செகந்திராபாத் இரட்டை நகரத்தின் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் 13 புதிய பன்மாதிரி போக்குவரத்து சேவைகளை கொடியசைத்து தொடங்கிவைப்பார். இதன் மூலம் பயணிகள் விரைவாகவும், வசதியாகவும் பயணம் செய்ய வழி ஏற்படும். செகந்திராபாத்-மெகபூப் நகர் மின்மயமாக்கல் மற்றும் இரட்டை ரயில் பாதை திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்தத் திட்டம் ரூ.1410 கோடி மதிப்பில் 85 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ரயில்களின் சராசரி வேகத்தை உயர்த்துவதுடன், எண்ணற்ற வசதிகளை வழங்குகிறது.

ஐதராபாத் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர், ஐதராபாத் பிபி நகர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குக்கு இது சான்றாகும். பிபி நகர் எய்ம்ஸ் ரூ.1,350 கோடியில் உருவாக்கப்படவுள்ளது. பிபி நகர் எய்ம்ஸ், தெலங்கானா மக்களுக்கு அவர்களின் வீட்டுவாசலில் முழுமையான, தரமான, விரிவான சுகாதார சேவைகளை வழங்கும் முக்கிய மைல்கல்லாக அமையும்.

இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் ரூ.7,850 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த சாலைத் திட்டங்கள் தெலங்கானா, ஆந்திரா இடையே சாலை இணைப்பை வலுப்படுத்துவதுடன் இந்த பிராந்தியத்தில் சமூகப்பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

The post தெலங்கானாவில் செகந்திராபாத்-திருப்பதி இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் மோடி 8ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Vande ,Bharat ,Secunderabad-Tirupathi ,Telangana ,Delhi ,Narendra Modi ,
× RELATED கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை...