×

டிஏபிக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம் பயன்படுத்த அறிவுறுத்தல்

சிவகங்கை, ஏப்.6: டி.ஏ.பி.க்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், பெரும்பாலும் டி.ஏ.பி. உரத்தையே அடி உரமாக பயன்படுத்துகின்றனர். டி.ஏ.பி. உரம் தயாரிப்பிற்கு தேவைப்படும் மூலப்பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை உலக அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உள்நாட்டில் டி.ஏ.பி உர உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதால், டி.ஏ.பி. உரங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

டி.ஏ.பி. உரத்தை துறைமுகத்தில் இறக்கி, மாவட்டங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே நமது நாட்டிலேயே உற்பத்தி செய்து எளிமையாக கிடைக்கும் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக பயன்படுத்தலாம். ஒரு மூட்டை டி.ஏ.பி. உரத்தில் 9 கிலோ தழைச்சத்தும் 23 கிலோ மனிச்சத்தும் உள்ளது, இதற்கு மாற்றாக மூன்று மூட்டை சூப்பர் பாஸ்பேட்டும் 20கிலோ யூரியாவும் சேர்த்து அடியுரமாக இடலாம். அல்லது காம்பளக்ஸ் ஒரு மூட்டையும் 75கிலோ சூப்பர் பாஸ்பேட் சேர்த்து அடியுரமாக பயன்படுத்தலாம். சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச்சத்து, நீரில் எளிதில் கரையும் தன்மை கொண்டதால் வேர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டிஏபிக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம் பயன்படுத்த அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Dinakaran ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்