×

புதுக்கோட்டை கோடியக்கரையில் இலங்கை படகில் சட்டவிரோதமாக நுழைந்த 3 பேர் திருவள்ளூரில் கைது

புதுக்கோட்டை, ஏப்.6: புதுக்கோட்டை கோடியக்கரையில் இலங்கை படகில் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு வந்த 3 பேரை திருவள்ளூரில் போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள கோடியக்கரை பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த பைபர்படகு ஒன்று கரை ஒதுங்கியது. அதில் ஒரு டீசல் கேன் மட்டுமே இருந்துள்ளது. புதுக்கோட்டை கடலோர காவல் படை போலீசார் அந்த படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியையை இலங்கை அகதிகள் முகாமில் தினசரி எத்தனை பேர் உள்ளனர் என்பதை போலீசார் நேற்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது சட்டவிரோதமாக இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் இந்த அகதிகள் முகாமில் இருந்தது தெரியவந்தது. மூன்று பேரும் சிந்துஜன், லிங்கேஸ்வரன், துஷன் ஆகியோர் ஆவார்கள்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக பைபர் படகுமூலம் கடல் வழியாக வந்து ஆள் நடமாட்டம் இல்லாத கோடியக்கரை கடற்கரை பகுதியில் படகை நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்து மூலம் திருவள்ளூர் சென்றுள்ளனர். திருவள்ளூரில் உள்ள கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் அவருடைய உறவினர்களை சந்தித்து விட்டு அங்கே தங்கி இருந்தபோது போலீசில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த மூன்று பேரை திருவள்ளூர் மாவட்ட கியூ பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களை கைது செய்த போலீசார் மூன்று பேரையும் புதுக்கோட்டை கடலோர காவல்படை போலீசில் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் கடலோர காவல்படை போலீஸ், புதுக்கோட்டை கியூ பிராஞ்ச் போலீசார் ஆகியோர் தனித்தனியாக விசாரணை செய்வார்கள். விசாரணையில் இவர்கள் எப்படி வந்தனர், எதற்காக வந்தனர் இவர்களுக்கு யாரெல்லாம் உதவி செய்தனர், கடத்தல் ஏதும் செய்ய வந்தார்களா, இல்லையென்றால் உண்மையிலேயே உறவினர்களை பார்க்கத்தான் வந்தார்களா என்பது முழு விசாரணை பிறகு தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post புதுக்கோட்டை கோடியக்கரையில் இலங்கை படகில் சட்டவிரோதமாக நுழைந்த 3 பேர் திருவள்ளூரில் கைது appeared first on Dinakaran.

Tags : Pudukottai Kodiakkarai ,Tiruvallur ,Pudukottai ,Thiruvallur ,Tamil Nadu ,Pudukottai Kodiakkarai.… ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...