×

கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் பாழடைந்து கிடக்கும் பொருள் வைப்பு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்

கொள்ளிடம், ஏப்.6: பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் பாழடைந்து கிடக்கும் பொருட்கள் வைப்பு அறையை சீரமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலேயே சிறந்த துறைமுகமாக விளங்கிவரும் இந்த மீன்பிடி துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் விசைப்படகுகள் பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். மேலும் படகுகளை பழுது நீக்கம் செய்தல், மீன்களை தரம் பிரித்தல், வலை பின்னுதல், கருவாடு உலர வைத்தல் மற்றும் விற்பனை செய்தல், ஐஸ்கட்டி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மேலும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் பொருள் வைக்கும் கட்டிடம் கட்டப்பட்டு 15 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டிடம் பாதுகாப்பற்று இருப்பதால் அனைத்து அறைகளும் பூட்டப்பட்டு இந்த கட்டிடத்துக்குள் எந்த பொருள்களும் வைப்பதில்லை. இந்தப் பொருள்வைக்கும் கட்டிடத்துக்குள் உள்ள பத்துக்கும் மேற்பட்ட அறைகளில் மீன், கருவாடு, மீன் பிடிவலைகள், ஐஸ் பெட்டிகள், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட மீன்பிடி தொழிலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டு மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த கட்டிடத்தில் மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் உள்ள சுவர்கள் பழுதடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன. கட்டிடத்தின் கூரை உட்பகுதியில் உள்ள கான்கிரீட் பெயர்ந்து விழுந்துள்ளது. எனவே பொருள் வைக்க பயன்பட்டு வந்த இந்த கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு புதியதாக பொருள் வைக்கும் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழையாறு துறைமுக மீன் மற்றும் கருவாடு வியாபாரிகள் சங்கத் தலைவர் பொன்னையா தெரிவித்தார்.

The post கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் பாழடைந்து கிடக்கும் பொருள் வைப்பு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kollidam ,Palaiyaru fishing harbor ,Palaiyaru ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் அருகே கடைவீதியில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது