×

பிரப்சிம்ரன் –ஷிகர் தவான் அதிரடி: ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்

கவுகாத்தி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன் வித்தியாசத்தில் வென்றது. பரஸபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசியது. பிரப்சிம்ரன், கேப்டன் தவான் இணைந்து பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி ராயல்ஸ் பந்துவீச்சை பதம் பார்த்தது. தவான் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட பிரப்சிம்ரன் 28 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவரில் 90 ரன் சேர்த்தனர். பிரப்சிம்ரன் 60 ரன் (34 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஹோல்டர் வேகத்தில் பட்லர் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த பானுகா ராஜபக்ச 1 ரன் எடுத்த நிலையில் காயம் காரணமாக பெவிலியன் திரும்ப, தவான் – ஜிதேஷ் ஜோடி 56 ரன் சேர்த்தது. தவான் 30 பந்தில் அரை சதம் அடிக்க, ஜிதேஷ் 27 ரன் (16 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சாஹல் சுழலில் வெளியேறினார். சிக்கந்தர் 1 ரன் மட்டுமே எடுத்து அஷ்வின் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், தவான் அதிரடியை தொடர… பஞ்சாப் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஷாருக் கான் 11 ரன் எடுத்து ஹோல்டர் வேகத்தில் பட்லர் வசம் பிடிபட்டார். பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன் குவித்தது. ஷிகர் தவான் 86 ரன் (56 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்), சாம் கரன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ராஜஸ்தான் பந்துவீச்சில் ஹோல்டர் 2, அஷ்வின், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்து 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 ரன் (25 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். ஹெட்மயர் 36 ரன் (18 பந்து), ஜூரேல் ஆட்டமிழக்காமல் 32 ரன் (15 பந்து) எடுத்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் எல்லீஸ் 4 விக்கெட், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட் வீழ்த்தினர். பஞ்சாப் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

The post பிரப்சிம்ரன் – ஷிகர் தவான் அதிரடி: ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப் appeared first on Dinakaran.

Tags : Prabsimran ,Shikhar ,Dhawan ,Punjab ,Rajasthan ,Guwahati ,IPL league ,Rajasthan Royals ,Punjab Kings ,Parasapara… ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்