×

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சல் பிரதேசம்: அமெரிக்கா உறுதி

வாஷிங்டன்: அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அங்கீகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அருணாச்சல் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி, அம்மாநிலத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சல் பிரதேசத்தை உரிமை கோரும் முயற்சியின் ஒரு பகுதியாக அங்குள்ள 11 இடங்களுக்கு சீனா கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய பெயர்களை சூட்டியது. சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் வெளியிட்ட இந்தப் பட்டியலில் 2 நிலப் பகுதிகள், 2 குடியிருப்பு பகுதிகள் 5 மலைச்சிகரங்கள், 2 ஆறுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒன்றிய வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கடும் கண்டனம் தெரிவித்தார்.அவர் வெளியிட்ட அறிக்கையில், சீனா இதுபோன்ற முயற்சியில் ஈடுபடுவது ஒன்றும் முதன்முறையல்ல. இதனை முழுமையாகவும் தெளிவாகவும் நாங்கள் மறுக்கிறோம்.

இந்தியாவில் இருந்து பறிக்கப்பட முடியாத பகுதியாக அருணாசல பிரதேசம் நீடிக்கும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை சூட்டும் முயற்சியால், இந்த உண்மையை மாற்ற முடியாது என தெரிவித்து உள்ளார். இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,‘‘ அருணாச்சல் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இதில் ஒருதலைபட்சமான சீனாவின் நடவடிக்கையை அமெரிக்கா எதிர்க்கிறது’’ என்று தெரிவித்தார். அருணாச்சல் பகுதிகளுக்கு சீனா இதுபோல் மறு பெயரிடுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் 2017-ல் 6 இடங்களுக்கும் 2021-ல்15 இடங்களுக்கும் சீனா புதிய பெயரை சூட்டியது.

The post இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சல் பிரதேசம்: அமெரிக்கா உறுதி appeared first on Dinakaran.

Tags : India ,Arunachal Pradesh ,US ,Washington ,United States ,South Tibet ,America ,
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...