×

குக்கர் கட்சியை காலி செய்வதில் தீவிரம் காட்டும் இலை கட்சி தலைமை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேனிக்காரரின் பரிதாப நிலைக்கு பிறகு, குக்கரை முடக்க திட்டம் போட்டுள்ளது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சிவகங்கை மாவட்டத்துல குக்கர் கட்சி கூடாரத்தை காலி செய்யும் வேலையை கனகச்சிதமாக முடிக்க இலைக்கட்சி தரப்பினர் தீவிரமாக இருக்கிறார்களாம். காரணம், தேனிக்காரரை உசுப்பேற்றிவிட்டு, தன் பக்கம் சேர்க்க நினைக்கும் குக்கரை ஆப் செய்ய வேண்டும் என்பதுதான் சேலம்காரரின் முக்கிய அஜென்டாவாம். அந்த பணியின் தொடர்ச்சிதான் சிவகங்கை மாவட்டத்துல குக்கரை காலி செய்யும் பணி தீவிரமாக நடக்குதாம். இவ்வூருக்கு வந்து சென்ற சேலம்காரருக்கு கண்டன போஸ்டர், ஆர்ப்பாட்டம் என கடுமையான எதிர்ப்புகளை தேனிக்காரர் தரப்பு செய்து பெரிய அளவில் ெதால்லை கொடுத்ததாம்.

இதனால் டென்ஷன் ஆன சேலம்காரர் சிவகங்கை இல்லை பழனிசாமி கங்கை என்று மாற்றும் அளவுக்கு குக்கரை சார்ந்தவர்களை நம்ம அணியில சேர்த்தே ஆக வேண்டும் என்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்தாராம். அதனால் அவரை திருப்திப்படுத்த முதலில் குக்கர் கட்சி கூடாரத்தை காலி செய்யும் பணியை அவரது அணியினர் முழு வீச்சில் தொடங்கிட்டாங்க. இதில் குக்கர் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ முதல் விக்கெட்டாக விழுந்தாராம். சென்னை சென்று சேலத்துக்காரர் முன்னிலையில் அவர் கட்சியில் சேர்ந்தார். கடும் குடைச்சல் கொடுக்கும் அவரை, கட்சியில் சேர்த்தது சேலத்துக்காரர் அணியின் மாவட்ட செயலாளருக்கு சற்று அதிர்ச்சியாம். அவரையும் அழைத்து சேலம்காரர் சமாதானம் செய்தாராம். முதல்ல குக்கர் கட்சியை உடைப்போம். அப்புறம் உங்கள் எல்லா பிரச்னைகளுக்கும் பெரிய தீர்வு காணப்படும் என்று உற்சாகமாக பேசி அனுப்பி வைத்தாராம்…’’ என்றார்
விக்கியானந்தா.

‘‘தூங்கா நகர மாவட்டத்துல தேனிகாரர் நிலைமை தடுமாற்றத்தில் இருக்காமே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சி ஆட்சியில தமிழ்நாடு முழுக்க ஏழு மாவட்டங்கள்ல இருக்கிற பால் சங்கத்துல 201 பேர பணியில சேர்த்தாங்க. ஆட்சி மாறியதும், இதுல முறைகேடு நடந்ததா சொல்லி 201 பேரையும் நீக்கிட்டாங்க. இதுல ஹனிபீ மாவட்டத்துல வேலைக்கு சேர்ந்த 18 பேரும் அடக்கம். இவங்க பல லகரங்களை பதவியில் இருந்தவங்களுக்கு கொடுத்தாங்களாம். இதனால தங்களுக்கு ஒரு தீர்வு கேட்டு ஹனிபீ மாவட்ட பால் சங்க தலைவராக இருந்த தர்மயுத்தம் நாயகனின் தம்பிக்கிட்ட முறையிட்டாங்க. ஆனா தம்பியோ தன்னோட காலத்துல வேலை கொடுத்தாச்சு. சம்பளமும் வாங்கிட்டீங்க. அதனால நான் ஒண்ணும் பண்ண முடியாது. வேணும்னா சட்டத்தின் மூலமா வேலையில் சேர நடவடிக்கை எடுக்கலாம். அதுக்கு நான் உங்களுக்கு துணையாய் இருக்கிறேன்னு நழுவினாராம்.

லகரங்களை இழந்தவங்க கொஞ்சம் நஞ்சமாவது திரும்ப கிடைக்கும் என்று நினைத்தபோது, கட்சிக்காக அண்ணன் சட்ட போராட்டம் நடத்துற மாதிரி நம்மளையும் சட்ட போராட்டம் நடத்த சொல்லிட்டாரேன்னு ஏமாற்றத்துல இருந்தாங்க. இப்போ என்னான்னா, ஹனிபீ மாவட்ட பால் சங்க துறையில் நடந்த முறைகேடு சம்பந்தமா ஆகஸ்ட் வரைக்கும் பதவி காலம் இருந்தும், முன்கூட்டியே நிர்வாக குழுவை தலைமை கலைச்சுடுச்சு. இதுல தர்மயுத்தம் நாயகனின் தம்பி பதவியும் காலியாகிடுச்சாம். மற்றவர்களை காப்பாற்றுகிறேன்னு சொன்னாரு, இப்போது அவரது பதவியே போச்சு அவரை வேறு யாரு காப்பாத்துவா…’’ என்று கேட்டார் விக்கியானந்தா. ‘‘உறவுகளை விபத்தில் இழந்து ஏழைகள் பசியிலும், பட்டினியிலும் இருக்கும்போது உதவாத அதிகாரியை லெப்ட் ரைட்னு வாங்கிய கலெக்டர் பற்றி சொல்லேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘குறிச்சி மாவட்ட கோட்டாட்சியர் தன் வேலையை பார்க்காமல் கலெக்டரிடம் சிக்கி சின்னா பின்னமாகிவிட்டாராம். விவசாயிகளை பல மணி நேரம் காக்க வைப்பது, பட்டா மேல்முறையீடு தொடர்பான 4 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணாமல் கிடப்பில் போட்டது என பல புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததது. சட்டம் ஒழுங்கு பிரச்னை, மணல் கொள்ள குறித்து கோட்டாட்சியரின் புகார் தெரிவிக்க அவசரமாக அழைக்க வேண்டுமென்றாலும் முடியாதாம், சியுஜி நம்பரை தொடர்பு கொண்டால் எடுக்கவே மாட்டாராம். இதற்கிடையே சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட 25 குடும்பத்தின் மனுக்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காதது கலெக்டர் ஆய்வில் தெரியவந்தது. ஆவணங்களை தணிக்கை செய்தபோது, முறையாக பராமரிக்காமல் இருந்ததை கண்டறிந்த கலெக்டர், கோட்டாட்சியரை லெப்ட் ரைட்னு வாங்கிட்டாராம்.

சாலை விபத்து நிவாரண நிதி காலதாமதத்தால் கடந்த மார்ச் மாதம் வரை ₹27 லட்சம் உதவி மக்களுக்கு போகலையாம். செத்துபோனவங்க குடும்பம் எப்படி பாடுபடும் என்ற கருணையே கிடையதா என்று கலெக்டர் செம டோஸ் விட்டாராம். காரணம், கடந்த நிதி ஆண்டு முடிந்தும் அந்த தொகை மீண்டும் தமிழக அரசு கணக்குக்கு திரும்பி சென்றது. புதிய நிதி ஆண்டு கணக்கின்படி அரசு பணம் ஒதுக்கிய பிறகுதான் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட 27 குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்படுமாம். சாதி சான்று, விபத்து நிவாரண உதவி, பொதுமக்கள் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்காமல் மக்களை கோட்டாட்சியர் அலைகழிக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மருத்துவர்களுக்குள்ள என்ன பிரச்னை… எதுக்காக முட்டி ேமாதிக்கிறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘பருத்தி மாவட்டத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 2வது முறையாக உயர் பதவியில் இருக்கும் தலைமை அதிகாரிக்கு மருத்துவமனையை கட்டுக்கோப்புடன் செயல்படுத்தும் திறன் இல்லையாம். இதனால் அரசு மருத்துவர்கள் இடையே கோஷ்டி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம். இந்த மோதலின் உச்சகட்டமாக ஒரு குரூப் டாக்டர்கள், எதிர் குரூப் டாக்டர்கள் மீது மாறி மாறி மேலிடத்திற்கு ஆதாரங்களுடன் பெட்டிசன்களை அனுப்புகிறார்களாம். கடைசியில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்க வைப்பது பிரச்னை விபரீத கட்டத்தை எட்டி உள்ளதாம். இதன் எதிரொலியாக மருத்துவமனை 2ம் நிலை உயரதிகாரியின் பதவி பறிபோனதாக சக மருத்துவமனை ஊழியர்களுக்குள் அரசல் புரசலாக பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

The post குக்கர் கட்சியை காலி செய்வதில் தீவிரம் காட்டும் இலை கட்சி தலைமை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Cooker ,Leaf party ,wiki ,Uncle ,Peter ,Sivagangai district ,Kukar ,Dinakaran ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...