×

கடந்த காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களை தெரிவித்தால்மீண்டும் பேருந்துகள் இயக்கநடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

மாமல்லபுரம், ஏப். 6: கடந்த காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்து வழித்தடங்களை தெரிவித்தால் அந்த பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி (திமுக), திருவிக நகர் தாயகம் கவி (திமுக) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அளித்த பதில் வருமாறு: மாநகர போக்குவரத்துக் கழகத்தால் தடம் எண் 515 ஏ என்று பேருந்து தாம்பரம் மேற்கு-கோவளம் இடையே 11 பேருந்துகள் இயங்குகின்றன. தடம் எண் 109 எக்ஸ் என்ற வழித்தடத்தில் பிராட்வே-திருப்போரூர் இடையே ஒரு பேருந்து இயங்குகிறது. தடம் எண் 566 பி என்ற வழித்தடத்தில் பட்டூர்-கோவளம் இடையே 2 பேருந்துகள் இயங்குகின்றன. ஆகவே, மொத்தம் 14 பேருந்துகள் கேளம்பாக்கம்-கோவளம் வழியாக இயக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட பேருந்துகளை பயன்படுத்தி கோவளம் வந்தடைந்தால், அவ்வழியாக இயக்கப்படும் தடம் எண் 588 என்ற வழித்தடத்தில் திருவான்மியூர்-மாமல்லபுரம் இடையே 5 பேருந்துகள், தடம் எண் 588B என்ற வழித்தடத்தில் மாமல்லபுரம்-பெசன்ட் நகர் இடையே 5 பேருந்துகள், தடம் எண் 102 எக்ஸ் என்ற வழித்தடத்தில் பிராட்வே-திருப்போரூர் இடையே 15 பேருந்துகள் என மொத்தம் 25 பேருந்துகளைப் பயன்படுத்தி மாமல்லபுரம் வந்தடையலாம். தேவையான அளவிற்கு இப்போது போக்குவரத்து வசதி அந்த பகுதியில் இருக்கிறது.

கலைஞரால் கொண்டுவரப்பட்ட மினி பஸ் திட்டத்தால் அரசு பேருந்துகள் செல்ல முடியாத குக்கிராமங்களுக்கு அந்த பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது. அந்தப் போக்குவரத்து உரிமையாளர்கள் இடைப்பட்ட காலத்தில் மினி பேருந்துகளை சரியாக இயக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர் என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களுடைய கருத்துகள் கேட்கப்பட்டு, அரசு அதிகாரிகள் மட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டு ஓர் அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் நல்ல தீர்வு காணப்படும். கடந்த ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்து வழித்தட குறிப்புகளை உறுப்பினர் தெரிவித்தால் அந்த பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பரமத்தி-வேலூர் தொகுதியிலே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட கிட்டத்தட்ட நான்கு பேருந்துகள் இயக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அவற்றை இயக்க முயற்சி எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

The post கடந்த காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களை தெரிவித்தால்
மீண்டும் பேருந்துகள் இயக்க
நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்
appeared first on Dinakaran.

Tags : Minister ,S.S.Sivasankar ,Mamallapuram ,
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...