×

கோயில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழப்புதீர்த்தவாரி பாதுகாப்பு இல்லாமல் நடத்தியதே விபத்துக்கு காரணம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி

தாம்பரம், ஏப்.6: மூவரசம்பட்டு கோயில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம், முறையான பாதுகாப்பு இல்லாமல் நிகழ்ச்சியை நடத்தியதால் தான் நிகழ்ந்துள்ளது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
சென்னை, மூவரசம்பட்டு கெங்கையம்மன் குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக நேற்று காலை கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி சூர்யா (22), வனேஷ் (22), ராகவன் (22), யோகேஸ்வரன் (21), ராகவ் (19) ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள், போலீசார் வந்து குளத்தில் ரப்பர் படகு உதவியுடன் தேடி சடலங்களை மீட்டனர்.
இதைதொடர்ந்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த அவர்களது உடல்களை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டார்.

அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோயில் குளத்தில் இறங்கியபோது, முதலில் ஒருவர் மட்டுமே ஆழமான பகுதிக்குள் தவறி விழுந்துள்ளார். அப்போது, அருகில் இருந்தவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்துள்ளனர். இதில் ராகவன், லோகேஸ்வரன், வனேஷ், சூர்யா, ராகவ் உள்ளிட்ட 5 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள், 20 முதல் 25 வயது வரை உடைய படித்த இளைஞர்கள். தீர்த்தவாரி நிகழ்ச்சியை தகுந்த பாதுகாப்புடன் நடத்தி இருக்க வேண்டும். தகுந்த பாதுகாப்பு இல்லாமல் நடத்தியதால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. நான் சட்டமன்றத்தில் இருந்தபோது தகவல் வந்தது. உடனடியாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்லுங்கள் என்று கூறினார். அதனால் முதல்வரின் சார்பில், இறந்த 5 பேரின் குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இது, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில். நிகழ்வுக்கு முன்பாக காவல்துறைக்கு முறையாக தகவல் அளிக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, மருத்துவமனை தலைமை மருத்துவர் பழனிவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post கோயில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு
தீர்த்தவாரி பாதுகாப்பு இல்லாமல் நடத்தியதே விபத்துக்கு காரணம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி
appeared first on Dinakaran.

Tags : Minister ,Thamo Anparasan ,Thambaram ,Muvarasampatu temple pond ,
× RELATED வாக்கு எண்ணுமிட முகவர்கள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்