×

முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தபடிகோயம்பேடு, நீலாங்கரை உள்பட6 மகளிர் காவல் நிலையங்கள் திறப்பு:  கோட்டூர்புரத்தில் கமிஷனர் சங்கர் ஜிவால் குத்துவிளக்கேற்றினார் அதிமுக ஆட்சியில் காற்றில் பறந்த கோரிக்கை திமுக ஆட்சியில் நிறைவேற்றம்

சென்னை, ஏப். 6: முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தபடி, சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் 6 புதிய மகளிர் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டது. கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தபடி, சென்னையில் புதிதாக கோட்டூர்புரம், கோயம்பேடு, புழல், நீலாங்கரை, தரமணி மற்றும் மீனம்பாக்கம் ஆகிய 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது. புதிய காவல் நிலையங்களுக்கு பெண் இன்ஸ்பெக்டர், பெண் எஸ்ஐ, பெண் தலைமை காவலர், பெண் எழுத்தர், பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அபிராமபுரம் காவல் நிலைய வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த காவல் நிலையத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அப்போது, இணை கமிஷனர் திஷா மிட்டல், மயிலாப்பூர் துணை கமிஷனர் ரஜத் சதுர்வேதி, கோட்டூர்புரம் உதவி கமிஷனர் காந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது, காவல் நிலையத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் அந்தோணி விசித்ரா உள்ளிட்டருக்கு வாழ்த்து தெரிவித்தும், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரை வழங்கினார்.

அதேபோல், புழல் காவல்நிலைய வளாகத்தில் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையமும், கோயம்பேடு காவல் நிலைய வளாகத்தில் கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையமும், திருவான்மியூர் காவல் நிலைய வளாகத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையமும், தரமணி காவல் நிலைய வளாகத்தில் தரமணி அனைத்து மகளிர் காவல் நிலையமும், மீனம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் மீனம்பாக்கம் அனைத்து காவல் நிலையமும் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கோயம்பேடு, நெற்குன்றம், சின்மயா நகர், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெண்களுக்கான குடும்ப சண்டை மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பாக பல வருடங்களாக திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வந்தனர். புகார் கொடுக்க நீண்டதூரம் செல்ல வேண்டியது இருப்பதால் கோயம்பேடு பகுதியில் அனைத்து மகளிர் காவல்நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதன்பிறகு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுரவாயல் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று புகார்கள் கொடுக்கும் வகையில் மாற்றப்பட்டது. ஆனால் மதுரவாயல் பகுதிக்கு சென்று புகார் கொடுக்க மிகவும் சிமமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, பெண்களின் கோரிக்கையை ஏற்று, கோயம்பேடு காவல் நிலையத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு துணை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து, நேற்று காலை 10.30 மணி அளவில் கோயம்பேடு காவல் துணை ஆணையர் குமார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.

பின்னர், கோயம்பேடு காவல் துணை ஆணையர் குமார் கூறும்போது, ‘‘கோயம்பேடு, நெற்குன்றம், சின்மயா நகர் ஆகிய பகுதிகளில் இருந்து அப்பகுதி மக்கள் மதுரவாயல் பகுதிக்கு சென்று புகார் கொடுக்க செல்ல சிரமமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், எங்களுக்கு கோயம்பேடு பகுதியில் அனைத்து மகளிர் காவல்நிலையம் செயல்பட்டால் புகார் கொடுக்க வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று (நேற்று) கோயம்பேடு காவல்நிலையத்தில் அனைத்து மகளிர் காவல்நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு, இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் மூன்று தலைமை காவலர்கள், இரண்டு முதல்நிலை காவலர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் பொதுமக்கள் புகார் கொடுக்கலாம்’’ என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
கோயம்பேடு மற்றும் சுற்றுப்புற பகுதி பெண்கள் கூறும்போது, ‘‘கோயம்பேடு காவல் நிலையத்தில் அனைத்து மகளிர் காவல்நிலையம் அமைத்து தர வேண்டும் என அமுதிக ஆட்சியில் பல வருடங்களாக கோரிக்கை வைத்து, போராடி வந்தோம். ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. திமுக ஆட்சியின்போது கோயம்பேடு பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து இருந்தோம். எங்களின் கோரிக்கையை ஏற்று, சீக்கிரமாக அனைத்து மகளிர் காவல் நிலையம் திறந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து மகளிர் காவல்நிலையம் அமைத்து கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறாம்’’ என்றனர்.

The post முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தபடி
கோயம்பேடு, நீலாங்கரை உள்பட
6 மகளிர் காவல் நிலையங்கள் திறப்பு:  கோட்டூர்புரத்தில் கமிஷனர் சங்கர் ஜிவால் குத்துவிளக்கேற்றினார்
 அதிமுக ஆட்சியில் காற்றில் பறந்த கோரிக்கை திமுக ஆட்சியில் நிறைவேற்றம்
appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Neelangara ,Chief Minister ,Legislative Assembly ,Commissioner ,Shankar Jiwal ,Kotturpuram ,DMK ,AIADMK ,Chennai ,M.K.Stal ,Chennai Municipal Police Commission ,Koturpuram ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...