×

விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை பணி2024 ஜூன் மாதம் முடிவடையும்

விழுப்புரம், ஏப். 6: விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை பணி வரும் 2024 ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சாத்தூர் டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் (மதிமுக), மதுராந்தகம் மரகதம் குமாரவேல் (அதிமுக), கும்பகோணம் க.அன்பழகன் (திமுக), குமாரபாளையம் தங்கமணி (அதிமுக) , கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன் (அதிமுக) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்த பதில் வருமாறு: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை 78ல் உள்ள படந்தால் விலக்கு என்ற பகுதியில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்க வாகன கீழ்ப்பாலம் அமைப்பதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டிருக்கிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டவுடன் பணிகள் துவங்கப்படும். சாத்தூர்-திருவேங்கடம் சாலையிலுள்ள தரைப்பாலத்தை ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் 2023-2024ல் உயர்மட்ட பாலமாக அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை மிக நீண்டகாலமாக அமைக்கப்பட்டு வருகின்ற சாலை. இதற்காக ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரடியாகச் சந்தித்து, கடிதங்களும் கொடுத்து, அதற்குப் பின்னர், ஒப்பந்ததாரர்களையெல்லாம் வலியுறுத்தியதன் அடிப்படையில், கூட்டங்கள் நடத்தப்பட்டு, அந்தச் சாலைகள் இப்போதுதான் விரைவாக அமைக்கின்ற நிலை வந்திருக்கிறது. 2024 ஜூன் மாதத்திற்குள் முழுமையாக சாலை அமைக்கப்பட்டுவிடும்.

வேலூர் நேஷனல் தியேட்டரிலிருந்து கிருஷ்ணா நகர் வரைக்கும் மேல்மட்டப் பாலத்தை அமைக்க வேண்டுமென்றும் சிஎம்சி மருத்துவமனைக்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார். வியாபார ஸ்தலங்களெல்லாம் பாதிக்காத அளவிற்கு அந்த வடிவமைப்பு வருமேயானால் வேலூரிலேயே பாலம் கட்டுவதற்கு முயற்சி செய்யப்படும். கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச் சாலை அமைக்க முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

The post விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை பணி
2024 ஜூன் மாதம் முடிவடையும்
appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Thanjavur ,Villupuram ,Kumbakonam ,Minister ,AV ,Velu ,Dinakaran ,
× RELATED நச்சுக்காற்றால் பொதுமக்கள் பாதிப்பு;...