×

மாவட்டத்தில் 94 மையங்களில் 20,641 பேர் எழுதுகிறார்கள்

நாமக்கல், ஏப்.6: நாமக்கல் மாவட்டத்தில், எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வினை 94 மையங்களில் 20,641 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வு இன்று (6ம் தேதி) துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில், இந்த ஆண்டு 300 பள்ளிகளை சேர்ந்த 10,891 மாணவர்கள், 9,750 மாணவிகள் என மொத்தம் 20,641 பேர் எஸ்எஸ்எல்சி தேர்வை எழுதுகிறார்கள். இன்று தமிழ் தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தேர்வுகள் துவங்கி, 1 மணிக்கு முடிவடைகிறது. 10ம் தேதி ஆங்கிலம், 13ம்தேதி கணிதம், 17ம் தேதி அறிவியல், 20ம் தேதி சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெறுகிறது.

மாணவ, மாணவிகள் தேர்வு எழுத, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிள் என மொத்தம் 94 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையம் இல்லாத தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் அருகில் உள்ள அரசு பள்ளி தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகிறார்கள்.தனித்தேர்வர்களுக்காக 2 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்விற்கான வினாத்தாள் மாவட்டத்தில் 9 இடங்களில் உள்ள கட்டுகாப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களின் கண்காணிப்பாளர்களாக மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு பணியில், 94 முதன்மை கண்காணிப்பாளர்கள், 94 துறை அலுவலர்கள், ஒரு கூடுதல் துறை அலுவலர், 20 வழித்தட அலுவலர்கள், 9 கட்டுகாப்பாளர்கள், 1731 அறைகண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.

தேர்வு மையங்களின் முதன்மை கண்காணிப்பாளர்களாக அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மூத்த பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. நேற்று மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளின் தேர்வு எண்ணை டெஸ்க்கில் ஆசிரிய, ஆசிரியைகள் எழுதினார்கள். தேர்வு பணியில் ஈடுபடும் வழித்தட அலுவலர்கள் (தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் எடுத்து செல்லும் ஆசிரியர்கள்) மற்றும் பறக்கும்படை உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கல்வி அலுவலர் ரவி தலைமையில் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது.

இதில் குறித்த நேரத்தில் அனைத்து மையங்களுக்கும் வினாத்தாள் கொண்டுசெல்வதை வழித்தட அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும். தேர்வு எழுத வராத மாணவ, மாணவிகளின் விபரங்களை முன்கூட்டியே மாவட்ட கல்வி அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுபாட்டு அறைக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் தெரிவிக்க வேண்டும் என, மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பிளஸ்1 அரசு பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 15ம் தேதி துவங்கியது. இந்த தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து தேர்வு மையங்களை விட்டுவெளியே வந்த மாணவ, மாணவிகள் பள்ளி வளாகங்களில் உற்சாகமாக துள்ளி குதித்தனர்.

The post மாவட்டத்தில் 94 மையங்களில் 20,641 பேர் எழுதுகிறார்கள் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,SSLC ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...