×

விஐடி பல்கலைக்கழகத்துடன் இன்டெல் நிறுவனம் ஒப்பந்தம்: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: மாணவர்களுக்கு உயர் கல்வியை வழங்கும் வகையில், விஐடி பல்கலைக்கழகத்துடன் இன்டெல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில், பொறியியல், மேலாண்மை மற்றும் சட்டப்படிப்புகள் உள்ளன. தற்போது கலை, அறிவியல் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கல்வியாண்டு முதல், பி.எஸ்.சி. கணினி அறிவியல், பி.எஸ்.சி. ஹானர்ஸ், பி.எஸ்.சி. ஹானர்ஸ் மற்றும் ஆராய்ச்சி ஆகிய படிப்புகள் அறிமுகப்படுத்துகிறோம். இது மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் மெய்நிகர் உண்மை, பிளாக் செயின், இணைய பாதுகாப்பு, ரோபோட்டிக்ஸ், இணைய உடல் அமைப்புகள் ஆகிய அதிநவீன தொழில்நுட்பங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

தொழில்துறை சார்ந்த தொழில்நுட்ப திறன் இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் சந்தைப்படுத்தக்கூடிய திறன்களை உருவாக்குவதற்கும், உயர்மட்ட தொழில்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் உயர்மட்ட கல்வியை வழங்கும் வகையில், இன்டெல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. நேற்று வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வி.ஐ.டி. பல்கலைக்கழக துணை தலைவர் சேகர் விஸ்வநாதன், இன்டெல் நிறுவன திட்ட மேலாளர் கிரிஷ் ஆகியோர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இதன்மூலம் இன்டெல் நிறுவனத்தின் உதவியுடன் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழி கற்றல் போன்ற பாடங்கள் பயிற்றுவிக்க முடியும். பி.எஸ்.சி. ஹானர்ஸ் படிப்பில் சேரும் மாணவர்கள் நேரடியாக பி.எச்.டி. சேர முடியும். மேலும், முதுகலையில் நேரடியாக 2ம் ஆண்டில் சேர முடியும். இந்த படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. நிகழ்வில் விஐடி பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், ஏ.ஓ.கே. கம்ப்யூட்டிங் இயக்குனர் அருண்சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

The post விஐடி பல்கலைக்கழகத்துடன் இன்டெல் நிறுவனம் ஒப்பந்தம்: நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Intel ,VIT University ,Chennai ,VIT ,Dinakaran ,
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...