×

கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களாக 20 லட்சம் பேர் 5000 கோடி ரூபாய் அளவுக்கு கிராம பொருளாதாரத்தில் பணப்புழக்கம்: பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள், கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.13 கோடி அளவிற்கு ஆண்டுக்கு ரூ.5000 கோடி அளவுக்கு கிராமப் பொருளாதாரத்தில் பணப்புழக்கம் ஏற்படுகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறினார். சட்டப்பேரவை 2023-24 ஆண்டிற்கான பால்வளத்துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் ஆவடி நாசர் பதிலளித்து பேசியதாவது: தஹி தஹி தமிழ்நாட்டில் நஹி, நஹி, பால் இங்கு தூத் ஆகாது, தயிர் இங்கு தஹி ஆகாது, அந்தி வந்தால் நிலவு வரும். இந்தி வந்தால் கடும் எதிர்ப்பு வரும். முதலமைச்சரின் வழிகாட்டுதல்கள் படி இயங்கிவரும் பால்வளத்துறை பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை நியாயமான விலையில் கொள்முதல் செய்வதோடு தரமான தூய பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலைவில் வழங்குவதில் 65 ஆண்டுகளாக தமிழகத்தின் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் சுமார் 20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.13 கோடி அளவிற்கு அதாவது வருடத்திற்கு ஏறத்தாழ ரூ.5000 கோடி அளவிற்கு கிராமப் பொருளாதாரத்தில் பணப்புழக்கம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி, பசும்பாலின கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.32 லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41 லிருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

ஆவின் பால் விற்பனை சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதியன்று அதிகபட்சமாக 15.05 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையும், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மூலம் 31.8.2022ல் அதிகபட்சமாக ரூ.15.80 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையும் செய்து சாதனை படைத்துள்ளது. 2022 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தின் மூலம் சிறப்பு இனிப்பு வகைகள் மற்றும் இதர பால் பொருட்கள் ரூ.116 கோடிக்கு விற்பனை செய்யது சாதனை படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டினை விட 33% கூடுதலாகும். ஆவின் பால் பொருட்கள் அதிகரித்திட ஏதுவாக விற்பனையினை உயர்த்திடும் பொருட்டு புதிதாக 280 எண்ணிக்கையிலான பாலகங்கள் துவங்கப்பட்டுள்ளன மற்றும் புதிதாக 1300 எண்ணிக்கையிலான விற்பனை முகவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பேரவையில் அமைச்சர் நாசர் கூறினார்.

  • தஹி தமிழ்நாட்டில் நஹி…
    தஹி, தஹி தமிழ்நாட்டுக்குள் நஹி, நஹி. தயிர் என்போர், தமிழே எங்கள் உயிர் என்போம். பால் இங்கு தூத் ஆகாது, தயிர் இங்கு தஹி ஆகாது. அந்தி வந்தால் நிலவு வரும், இந்தி வந்தால் கடும் எதிர்ப்பு வரும் என்று முந்தி முழங்கி இந்தி திணிப்பை உந்தி உதைத்து, பின்வாங்க வைத்து வென்று காட்டிய இயக்கம் திமுக, என்றும் பால்மாறாது, எம் கொள்கைத் தாகம் தீராது என்று அமைச்சர் ஆவடி நாசர் பேரவையில் பேசினார்.

The post கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களாக 20 லட்சம் பேர் 5000 கோடி ரூபாய் அளவுக்கு கிராம பொருளாதாரத்தில் பணப்புழக்கம்: பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Dairy Resources Minister ,Nasser ,Chennai ,Tamil Nadu ,Dairy Resources ,Minister ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...