×

நிலக்கரி திட்டத்தை கைவிடாவிட்டால் பிரதமருக்கு எதிராக போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

மன்னார்குடி: நிலக்கரி திட்டத்தை கைவிடாவிட்டால் தமிழகம் வரும் பிரதமருக்கு, எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று பிஆர் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் மன்னார்குடியில் நேற்று அளித்த பேட்டி: காவிரி டெல்டாவில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் நடைமுறையில் உள்ள போது ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல், கலந்து பேசாமல் தொடர்ந்து பேரழிவு திட்டங்களுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மேற்கொள்வதற்கான முதல் கட்ட ஒப்பந்த பள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளதை வரவேற்கிறோம். தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வுரிமையை கருத்தில் கொண்டு பிரதமர் உடனடியாக நிலக்கரி திட்டத்தை கைவிட வேண்டும். மறுக்கும் பட்சத்தில் பிரதமரின் தமிழக வருகைக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் களமிறங்க நேரிடும் என எச்சரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சியில் ஒருமாதம் காத்திருப்பு போராட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: ‘டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் புதிய திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் சென்று போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம். காவல்துறை அனுமதி மறுத்ததால் வருகிற 12ம் தேதி முதல் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே தொடர்ந்து 30 நாட்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். ’ என்று தெரிவித்தார்.

The post நிலக்கரி திட்டத்தை கைவிடாவிட்டால் பிரதமருக்கு எதிராக போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : PM ,P. R.R. Pandeon ,Mannarkudi ,PR ,Pandean ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஐதராபாத்தில் பேருந்து சேவை குறைப்பு!!