×

மதுரை பல்கலை 7 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படும்: அமைச்சர் பொன்முடி தகவல்

பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, நத்தம் ஆர்.விசுவநாதன் (அதிமுக), துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மதுரை மேற்கு செல்வராஜ் (அதிமுக) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அளித்த பதில் வருமாறு: நத்தம் தொகுதி அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது 6 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், மூன்று அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளும் மற்றும் 19 சுயநிதி கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இதைத் தவிர ஓர் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியும், 12 சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் ஓர் அரசு உதவி பெறும் தொழில்நுட்பக் கல்லூரியும் மற்றும் 14 சுயநிதி பாலி டெக்னிக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

இக்கல்லூரிகள் அத்தொகுதி மாணவ, மாணவியர்களின் உயர் கல்வித் தேவைகளை நிறைவு செய்து வருவதால், நத்தம் தொகுதியில் புதியதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க வேண்டிய அவசியம் எழவில்லை. குறிப்பாக 16,201 இடங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அங்கே சேர்ந்திருக்கும் மாணவர்கள் 7,093. 9,108 இடங்கள் காலியாக இருக்கின்றன. மதுரையைப் பொறுத்தவரையில் மதுரைப் பல்கலைக்கழகத்தினுடைய 7 உறுப்புக் கல்லூரிகள் இந்த ஆண்டு அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும். கீழ்ப்பெண்ணாத்தூரில் கல்லூரி அமைப்பது தொடர்பான கோரிக்கைகள் எல்லாம் படிப்படியாக பரிசீலிக்கப்பட்டு, வெகுவிரைவில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்று பதிலளித்தார்.

The post மதுரை பல்கலை 7 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படும்: அமைச்சர் பொன்முடி தகவல் appeared first on Dinakaran.

Tags : Colleges ,Madurai University ,Natham R. Visunathan ,Adhikshagka ,Deputy Speaker ,K. Pichandi ,Madurai West ,Selvaraj ,Utsikhaka ,Minister ,Ponmudi ,
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...