×

சென்னையில் பரிதாப சம்பவம் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி: பங்குனி உத்திர தீர்த்தவாரியின்போது விபரீதம்

சென்னை: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழா தீர்த்தவாரியின் போது, மூவரசம்பட்டு குளத்தில் மூழ்கி 5 இளம் அர்ச்சகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் உயிர்தப்பினர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நங்கநல்லூர் எம்.எம்.டி.சி காலனியில் புகழ்பெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திரத்தின் போது, தீர்த்தவாரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நேற்று முன்தினம் முதல் தர்மலிங்கேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கால பூஜைகளுடன் விழா நடந்தது.

அப்பகுதியில் புகழ்பெற்ற கோயில் என்றாலும், தர்மலிங்கேஸ்வரர் கோயிலுக்கு என தனியாக குளம் கிடையாது. இதனால் கோயில் நிர்வாகம் ஒவ்வோர் ஆண்டும், பழவந்தாங்கல் அருகே உள்ள மூவரசம்பட்டில் உள்ள கெங்கையம்மன் கோயில் அருகே அமைந்துள்ள ஊராட்சி குளத்தில் தான் கோயில் விழாவுக்கான தீர்த்தவாரி மற்றும் தெப்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். அதன்படி தர்மலிங்கேஸ்வரர் கோயில் நிர்வாகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் அடங்கிய குழு ஒன்று நேற்று காலை 9 மணிக்கு சாமி சிலையை பல்லக்கில் வைத்து மூவரசம்பட்டில் உள்ள ஊராட்சி குளத்திற்கு ஊர்வலமாக மேளதாளத்துடன் கொண்டு வந்தனர். வழக்கத்தை விட ஊராட்சி குளத்தில் தண்ணீர் அதிகளவில் இருந்தது.

பின்னர் சாமி சிலையை குளக்கரையில் உள்ள படித்துறையில் வைத்தனர். அப்போது அர்ச்சகர்களில் 25 பேர் குளத்தில் இறங்கி மார்பளவு தண்ணீரில் நின்றபடி, கோயில் குருக்கள் பாராயணம் ஓதும் போது, ஒவ்வொருவராக தண்ணீரில் மூழ்கி எழுந்துள்ளனர். கடைசியாக பாராயணம் ஓதும் போது அனைவரும் ஒன்றாக தண்ணீரில் மூழ்கியுள்ளனர். அப்போது, இளம் அர்ச்சகர் ஒருவர் எதிர்பாராதவிதமாக குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால், இரண்டு கைகளை உயர்த்தியடி உதவி கேட்டு அலறியுள்ளார். ஆனால் அனைவரும் பாராயணம் ஓதுவதிலேயே கவனம் செலுத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது, உடன் இருந்த இளம் அர்ச்சகர் தண்ணீரில் மூழ்கியதை பார்த்த சக அர்ச்சகர்கள் அவரை மீட்க முயன்றனர். இதில் ஒருவர் பின் ஒருவராக கைகளை பிடித்தபடி ஆழமான பகுதிக்கு சென்றனர். காப்பற்ற முயன்ற 4 பேருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் அனைவரும் ஒருவரை ஒருவர் இழுத்தபடி 5 அர்ச்சகர்களும் நீரில் மூழ்கினர். அப்போது குளக்கரையில் வேடிக்கை பார்த்த மூவரசன்பட்டு பகுதியை சேர்ந்த நீச்சல் தெரிந்த பொதுமக்கள் சிலர் மற்றும் மூவரசம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.கே.ரவி ஆகியோர் குளத்திற்குள் குதித்து, தண்ணீரில் மூழ்கிய 5 இளம் அர்ச்சகர்களை தேடினர். குளத்தில் 20 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால், மூழ்கிய அர்ச்சகர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்படி, கிண்டி, வேளச்சேரி பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மூவரசம்பட்டு குளத்திற்கு விரைந்து வந்தனர். பிறகு ரப்பர் படகு மற்றும் மீட்பு கருவிகளுடன் வீரர்கள் குளத்தில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய 5 பேரை நீண்ட போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்டனர். இதைக்கண்டு, உயிரிழந்த இளம் அர்ச்சகர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிறகு பழவந்தாங்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் 5 இளம் அர்ச்சகர்கள் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த அனைவரும் 18 வயது முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள்.

சம்பவம் குறித்து பழவந்தாங்கல் போலீசார் விசாரணை நடத்திய போது, கோயில் நிர்வாகம் எந்தவித முன் அனுமதியும் பெறாமல், மூவரசம்பட்டு ஊராட்சியின் முக்கிய பிரமுகர்களிடம் மட்டும் கூறிவிட்டு கோயிலின் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது தெரிந்தது. ஊராட்சி குளத்தை கோயில் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தியது குறித்து பழவந்தாங்கல் போலீசார் ஊர் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கோயில் திருவிழாவின் போது, குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • 3 பேர் கல்லூரி மாணவர்கள்
    குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்கள், புழுதிவாக்கம் முத்து முகமது தெருவை சேர்ந்த ராகவ் (19), நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியை சேர்ந்த பானேஷ் (22), புழுதிவாக்கம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த ராகவன் (22), நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியை சேர்ந்த சூர்யா (22), மடிப்பாக்கம் பாலையா கார்டன் பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன் (21) என தெரியவந்துள்ளது. இவர்களில் ராகவ், பானேஷ், ராகவன் ஆகிய 3 பேரும் கல்லூரி ஒன்றில் சி.ஏ. படித்து வந்துள்ளனர். சூர்யா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மேக்கப் ஆர்டிஸ்ட் பணி செய்து வ்நதுள்ளார். யோகேஸ்வரன் ஒரகடத்தில் உள்ள தனியார் கார் கம்பேனியில் பணியாற்றி வந்துள்ளார். உயிரிழந்த 5 பேரும், பகுதி நேரங்களில் நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் தன்னார்வலராக கோவில் பணிகளை செய்ததும், கோயில் மூத்த அர்ச்சகர்களுக்கு உதவியாக அர்ச்சகர் பணியும் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
  • உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
    ‘‘தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கிய போது, எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி, சூர்யா, பானேஷ், ராகவன், யோகேஸ்வரன், ராகவன் ஆகிய 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. ’
  • விசாரணைக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவு
    மூவரசம்பட்டு கிராமத்திற்கு சொந்தமான குளத்தில் 5 அர்ச்சகர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடனே போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது விபத்து குறித்து மூவரசன்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.கே.ரவியிடம் கேட்டறிந்தார். அதன் பிறகு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஊராட்சி குளத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு யார் அனுமதி வழங்கியது என்று விசாரணை நடந்து வருகிறது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’’ என்றார்.
  • மனிதநேயத்தை மறந்த மனிதர்கள் சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோவால் பரபரப்பு
    மூவரசம்பட்டு ஊராட்சி குளத்தில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் சாமி சிலையை வைத்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோயிலின் மூத்த அர்ச்சகர்களுடன் வந்த 25 உதவி அர்ச்சகர்கள் சாமியை தண்ணீரில் வைத்து பாராயணம் ஓதும் போது, எதிர்பாராதவிதமாக ஒரு இளம் அர்ச்சகர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். இதனால் அவர் சக அர்ச்சகர்களிடம் உதவி கேட்டபடி தண்ணீரில் இரண்டு கைகளை உயர்த்தியபடி போராடினார். அப்போது தண்ணீரில் இருந்து சக அர்ச்சர்கள் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. ஒரு கட்டத்தில் அர்ச்சகர்களில் 4 பேர் உதவி செய்ய முயன்ற போது தான் அவர்களும் தண்ணீரில் சிக்கி 5 பேரும் போராடினர். அப்போது, மற்ற மூத்த அர்ச்சகர்கள் சிறிதும் உதவி செய்யாமல் அவர்கள் தண்ணீரில் முழுகும் வரை நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். பிறகு அனைவரும் தாங்கள் உயிரி பிழைத்தால் போதும் என்ற நோக்கில் கல் மனத்மதுடன் குளத்தில் இருந்து வெளியே வந்தனர். இந்த சம்பவம் அனைத்தையும் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post சென்னையில் பரிதாப சம்பவம் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி: பங்குனி உத்திர தீர்த்தவாரியின்போது விபரீதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Panguni Uthra Theerthawari ,Tirthavari ,Dharmalingeswarar ,temple ,Nanganallur, Chennai ,Muvarasampattu pond ,Panguni Uthra ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...