×

நியாயவிலைக் கடை பணியாளர்களின் பணியினைப் பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: பொதுவிநியோகத் திட்டத்தினைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நியாயவிலைக் கடை பணியாளர்களின் பணியினைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் ரொக்கப் பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்படும் என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தார்.

அதன்படி, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சீ. கோபாலகிருஷ்ணனுக்கு முதல் பரிசாக ரூ. 15,000-ம், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி. நந்தினிக்கு இரண்டாம் பரிசாக ரூ.10,000-ம், மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். மதுபாலனுக்கு மூன்றாம் பரிசாக ரூ.5,000-ம், மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட எடையாளர்களில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த டி. பாபுக்கு முதல் பரிசாக ரூ.10,000-ம், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். ராஜனுக்கு இரண்டாம் பரிசாக ரூ.6,000/ம், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த டி. துரைராஜூக்கு மூன்றாம் பரிசாக ரூ.4,000-ம் நற்சான்றிதழ்களும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் இன்று (05.04.2023) வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர். பெரிய கருப்பனும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியும் முன்னிலை வகித்தனர். திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட / தொலைந்து போன குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக நகல் மின்னணு குடும்ப அட்டையினைக் குடும்ப அட்டைதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்துப் பெறும் முறை 2020 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இணையதள வழியில் விண்ணப்பித்தாலும் அதற்குரிய தொகையைச் செலுத்தவும் மீண்டும் திருத்தப்பட்ட அட்டையைப் பெறவும் விண்ணப்பதாரர்கள் வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. தற்போது அந்த முறையை மாற்றி குடும்ப அட்டைதாரர்கள் நகல் குடும்ப அட்டை பெற மண்டலம்/வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே பணம் செலுத்திடவும் அஞ்சல் வழியிலேயே தங்கள் முகவரியிலேயே பெற்றிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி குடும்ப அட்டைதாரர்கள் www.tnpds.gov.in http://www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் போதே, அட்டைக்கான கட்டணம் ரூ.20- மற்றும் அஞ்சல் சேவைக் கட்டணம் ரூ.25- ஆக மொத்தம் ரூ.45-ஐ இணையவழியில் QR code அல்லது Net banking வழியாக செலுத்தி அச்சிடப்பட்ட நகல் குடும்ப அட்டையினை அஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அனுப்பி வைக்கும் முறையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர். பெரிய கருப்பன் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்கள்.

அஞ்சல் வழியில் அனுப்புவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் மருத்துவர் சு. பிரபாகர்,
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஆர். சண்முகசுந்தரம், தமிழ்நாடு தலைமை அஞ்சல் இயக்குநர் பி.ப்பி. ஶ்ரீதேவி, தலைமை அஞ்சல் இயக்குநர் ஜி. நடராஜன், அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் எஸ். பாக்கியலட்சுமி, மற்றும் இதர அலுவலர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post நியாயவிலைக் கடை பணியாளர்களின் பணியினைப் பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Justification Shop ,Udaiyanidhi Stalin ,Dinakaran ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...