×

தா.பழூர் அருகே 4 கிராமங்களில் நிலக்கரி திட்டம் ஒன்றிய அரசை எதிர்த்து விவசாயிகள் வயலில் இறங்கி திடீர் போராட்டம்

தா.பழூர் : அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு சிமெண்ட் ஆலைகள் மற்றும் சுண்ணாம்புக்கள் சுரங்கள் செயல்பட்டு வரும் நிலையில் மீதமுள்ள இரண்டு பங்கு நிலத்தில் விவசாயிகள் வேளாண் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். மிக குறைந்த பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் விவசாயத்தை அழிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு செயல்களில் இறங்கி உள்ளது. குறிப்பாக ஜெயங்கொண்டம் அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தை மையமாகக் கொண்டு பழுப்பு நிலக்கரி திட்டம் துவங்கப்பட உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழிசுக்குடி, பருக்கல், வாத்திகுடி காடு, காக்காபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பழுப்பு நிலக்கரி திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற உள்ளதாகவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான தா.பழூரில் இவ்வகையான நிலக்கரி எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள விவசாயம் முற்றிலும் அழிக்கப்பட்டு விவசாயிகளின் நிலைமை கேள்விக்குறியாக இருக்கும்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட செங்குந்தபுரம், புதுக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு இத்திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் நிலம் கொடுத்த விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு ஜெயங்கொண்ட பழுப்பு நிலக்கரி திட்டம் கைவிடப்படுவதாகவும், அதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் உரிய விவசாயிகளிடம் மீண்டும் வழங்கப்படும் எனவும் அறிவித்து தற்போது கையகப்படுத்தப்பட்ட நிலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது இந்த சுவடு மறைவதற்கு முன்பாகவே தா.பழூர் பகுதியில் நிலக்கரி திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது விவசாயிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

இதனை அடுத்து அந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில் முந்திரி, எள், கடலை, சோளம், கரும்பு, காய்கறி பயிர்களான கத்தரி, முருங்கை, முள்ளங்கி, முட்டை கோஸ், மற்றும் மரப்பயிர்களான தேக்கு, சவுக்கு உள்ளிட்ட பல்வேறு மரப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் அழித்து இப்பகுதியில் நிலக்கரி திட்டம் தொடங்கப்பட்டால் விவசாயம் அழிவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வேலை வாய்ப்புக்காக பல்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயரும் சூழலும் உருவாகும்.

டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்திற்கும் அனுமதி இல்லை என கூறி தமிழக அரசு தஞ்சை, திருவாரூர் ,நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது. ஆனால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திலும் இவ்வகையான நிலக்கரி திட்டம் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த விவசாய நிலங்களில் பழுப்பு நிலக்கரி திட்டம் தொடங்கப்படும் என அறிவித்துள்ளதை மத்திய அரசு கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலம் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர். மேலும் இத்திட்டத்திற்கு மாநில அரசு எவ்வகையிலும் அனுமதி வழங்கக் கூடாது பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தில் தா.பழூர், திருமானூர் ஒன்றியத்தை சேர்க்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தா.பழூர் அருகே 4 கிராமங்களில் நிலக்கரி திட்டம் ஒன்றிய அரசை எதிர்த்து விவசாயிகள் வயலில் இறங்கி திடீர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : T.D. ,Coal Project Union Government ,Palur ,T.D. Palur ,Ariyalur district ,T.A. ,Union ,Dinakaran ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது