×

கோடை காலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை-ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற குடிநீர் மற்றும் மின்சாரம் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குடிநீர் தேவையை சாமாளிக்க போர்கால நடவடிக்கை தேவை என ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், குடிநீர் மற்றும் மின்சாரம் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூட்டம் கூடுதல் ஆட்சியர் அலர்மேலு மங்கை தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சப் கலெக்டர் பிரியங்கா, கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பாஷா, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மின்வாரியத்துறை அதிகாரிகள், மற்றும் ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் பேசிய ஊராட்சிமன்ற தலைவர்கள், குடிநீர் தேவையை போக்க மோட்டார்களின் திறன்களை அதிகப்படுத்தி அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சீராக விநியோகம் செய்ய வேண்டும். கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு தனியாக நீரேற்று நிலையம் அமைக்க வேண்டும்.மக்கள் தொகை குறைவாக உள்ள ஊராட்சிகளுக்கு தற்போது அதிக அளவு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள ஊராட்சிகளுக்கு குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், மோட்டார் பிரச்னை ஏற்பட்டால் அதை சரி செய்ய, பத்து நாட்கள் ஆகிறது. அதுவரை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை சரி செய்ய, மோட்டார் பழுது பார்க்க கூடுதல் பணியாட்களை நியமிக்க வேண்டும். மேலும், எந்தவித அறிவிப்பும் இன்றி குடிநீர் வருவதால், ஏற்கனவே உள்ள தண்ணீரை தொட்டியிலிருந்து வீணாக வெளியேற்ற வேண்டிய நிலை உள்ளது.

எனவே, ஊராட்சி தலைவர்களிடம் தகவல் தெரிவித்த பின் தண்ணீர் விட வேண்டும். வடிகால் வாரியத்திலிருந்து தண்ணீர் விடும் போது, மின்தடை உள்ள பகுதிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. கிராம சபை கூட்டத்திற்கு துறை சார்ந்த அதிகாரிகள் பிரச்னைகளை கேட்க வருவது கிடையாது என தெரிவித்தனர். மின் துறையினர் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. கடந்த வராத்தில் பெய்த கன மழையில் கிராமப்புறங்களில் பல பகுதிகளில் மின் கம்பங்கள் சேதமடைந்தன. தற்போது வரை அது சரி செய்யப்படவில்லை.

கிராமப்பகுதிகளில் தேவையில்லாத மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். என கூறினர்,ஊராட்சி மன்ற தலைவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்த கூடுதல் ஆட்சியர் அலர்மேலு மங்கை, கோடைகாலம் துவங்கியுள்ளதால், இரண்டு மாத காலத்திற்கு தங்களின் ஊராட்சிகளில் உள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் பிரச்னைகளுக்கு ஏற்றவாறு மின்தடை தேதிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரம், குடிநீர் பிரச்னைகளை பட்டியலிட்டு விரைந்து குடிநீர் பிரச்னையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

The post கோடை காலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை-ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kinathukadavu ,Kinathukadavu panchayat ,
× RELATED கோவை மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்தது