×

சோளிங்கர் அருகே திருக்கல்யாண விழாவில் பங்கேற்று விட்டு திரும்பியபோது வேன் கவிழ்ந்து 20 நடன கலைஞர்கள் காயம்

சோளிங்கர்: சோளிங்கர் அருகே பங்குனி உத்திர திருக்கல்யாண விழாவில் பங்கேற்று விட்டு நள்ளிரவு வீடு திரும்பியபோது வேன் கவிழ்ந்ததில் 20 நடன கலைஞர்கள் காயமடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வைலாம்பாடி கிராமத்தில் உள்ள கோயிலில் நேற்றிரவு பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா நடந்தது. இதில் வாலாஜா நாட்டியப்பள்ளியை சேர்ந்த நாட்டிய குழுவினர் சுமார் 30 பேர் பங்கேற்று நடனமாடினர். இவர்களில் பலர் 10 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள். அனைவரும் நிகழ்ச்சி முடிந்ததும் நள்ளிரவு வேனில் வாலாஜா திரும்பினர். வைலாம்பாடி கிராம எல்லையை கடந்தபோது எதிர்பாராமல் வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர்.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸில் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் வாலாஜாவை சேர்ந்த கமலேஷ் (14), சரண்யா (20), ஜீவஹரி (13), வேன் டிரைவர் சுரேஷ் (35) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 16 பேர் லேசான காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சோளிங்கர் அருகே திருக்கல்யாண விழாவில் பங்கேற்று விட்டு திரும்பியபோது வேன் கவிழ்ந்து 20 நடன கலைஞர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Solingar ,Tirukalyana festival ,Panguni Uthra Thirukalyana festival ,
× RELATED சோளிங்கர் நரசிம்மர் கோவிலில்...