×

பாலக்கோடு சந்தையில் மாதம் 3 ஆயிரம் டன் தக்காளி விற்பனை-இடைத்தரகர்களின்றி விவசாயிகளே விற்கிறார்கள்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தமிழக அரசின் தக்காளி மாரக்கெட் 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த மார்க்கெட்டிற்கு தினசரி 120க்கும் மேற்பட்ட தக்காளி உற்பத்தி செய்யும் விவசாயிகள் சுழற்சி முறையில் வருகை தந்து மொத்தமாக தக்காளி விற்பனை செய்கின்றனர். இவ்வாறு தினசரி 100 டன் விற்பனைக்கு வருகிறது. சீசன் காலத்தில் 500 டன் வரை பாக்கோடு தக்காளி மார்க்கெட்டிற்கு வருகிறது. காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

சிவம், சாகு, 725 ஆகிய ரக தக்காளி தான் அதிகளவில் விற்பனைக்கு வருகிறது. பெல்ரம்பட்டி, பாப்பாரப்பட்டி, அனுமந்தபுரம் மற்றும் பாலக்கோடு, காரிமங்கலம் வட்டாரத்தில் இருந்து விவசாயிகள் அதிகம் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மதுரை, திருச்சி, சேலம், கோவை, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, சென்னை மற்றும் கேரளா வியாபாரிகள் நேரில் வருகை தந்து தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து செல்கின்றனர். இவ்வாறு சுமார் ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் டன் தக்காளி பாலக்கோடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் விற்பனை செய்யும் தக்காளி தரத்தில் முதலிடத்தில் உள்ளது. புளிப்பு மற்றும் இனிப்பு இருப்பதால் தக்காளியை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

இச்சந்தைகளில் இருந்து வாங்கி வந்து தர்மபுரி, ஏ.ஜெட்டிஅள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் ஆகிய உழவர் சந்தைகளில் தினசரி 20 டன் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டிற்கு 25 கிலோ மீட்டர் பரப்பரளவில் உள்ள விவசாயிகள் தக்காளியை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இடைத்தரகர்கள் இல்லை. நேற்று 15 கிலோ எடைகொண்ட ஒரு கூடை தக்காளி ₹130 முதல் 140 வரை விற்பனை செய்யப்பட்டது. 25 கிலோ கொண்ட கிரேடு ₹170 முதல் 200 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று 100 டன் விற்பனை செய்யப்பட்டது. இதில் சில்லரை விற்பனையில் தர்மபுரி உழவர் சந்தையில் ஒருகிலோ தக்காளி ₹10 முதல் 12 வரை விற்பனை செய்யப்பட்டது என்றனர்.

பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டைச் சேர்ந்த நிர்வாகி கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளின் முதன்மை பயிராக தக்காளி சாகுபடி இருந்து வருகிறது. பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளிகளை விவசாயிகள் பாலக்கோட்டில் உள்ள தக்காளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த சந்தையில் தினசரி 100 முதல் 500 டன் தக்காளி வரத்தை பொறுத்து விற்பனையாகிறது.

இந்த சந்தையில் இருந்து உள்ளூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வியாபாரிகள் தக்காளிகளை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து சரிந்துள்ளது. கோடைவெயில், கோடை மழையால் உற்பத்தி குறைந்துள்ளது. விலையும் சீராக உள்ளது. பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் மாதத்திற்கு 3 ஆயிரம் டன் தக்காளி தற்போது விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி உற்பத்தி சீசன் காலத்தில் இதைவிட கூடுதலாக விற்பனை செய்யப்படும் . இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளே விற்பனை செய்து விட்டு செல்கின்றனர் என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு சுழற்சி முறையில் 15 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படடுள்ளது. வீரியரக தக்காளி அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டருக்கு 30 டன் முதல் 40 டன் வரை தக்காளி மகசூல் கிடைக்கிறது. காரிமங்கலம், பாலக்கோடு வட்டாரத்தில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

பாலக்கோடு, காரிமங்கலம் ஜிட்டாண்டஅள்ளி, கம்பைநல்லூர், அரூர், மொரப்பூர் தக்காளி மண்டிகளுக்கு தக்காளி வரத்து உள்ளது. குறிப்பாக, மாவட்டத்தில் இருந்து கேரளா, கர்நாடகா மாநிலத்திற்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் டன் தக்காளி தர்மபுரி மாவட்டத்தில் இருந்து செல்கிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினசரி தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 10 டன் தக்காளி செல்கிறது. அதிக விளைச்சல் நேரத்தில் தக்காளி மதிப்பு கூட்டுப்பொருளாக மாற்ற வேண்டும். விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். ஒருசில விவசாயிகள் ஊறுகாய், ஜாம் உள்ளிட்டவை செய்கின்றனர். நடப்பாண்டு தக்காளி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் 350 ஹெக்டருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

The post பாலக்கோடு சந்தையில் மாதம் 3 ஆயிரம் டன் தக்காளி விற்பனை-இடைத்தரகர்களின்றி விவசாயிகளே விற்கிறார்கள் appeared first on Dinakaran.

Tags : Palakkod ,Darmapuri ,Tamil ,Nadu ,Government ,Palakkott, Darmapuri district ,Palakkodu ,
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...