×

நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து மதிற்சுவர் கட்டும்பணி? விவசாயிகள் சாலை மறியல்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே கால்வாயை ஆக்கிரமித்து மதிற் சுவர் கட்டும் பணியை கண்டித்து, விவசாயிகள் திடீர்  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள நீரின் மூலம் 800 ஏக்கர் நன்செய் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரியின் பின்பக்கத்தில் வீராணம் கால்வாய் செல்கிறது. அந்த கால்வாயை ஒட்டி தனியாருக்கு சொந்தமான நிலம் அமைந்துள்ளது. தற்போது, தனியார் நிலத்தின் உரிமையாளர் தனது நிலத்தை சுற்றி மதிற்சுவர் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளார். இந்நிலையில், இந்த மதிற்சுவர், ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயையும், வீராணம் கால்வாயையும் ஆக்கிரமித்து கட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தண்டலம் கிராம விவசாயிகள் சிலர், அங்கு சென்று மதிற்சுவர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்களிடம் வேலையை நிறுத்தும்படி கூறியுள்ளனர். ஆனால், தனியார் நிலத்தின் உரிமையாளர், தனது பெயரில் உள்ள பட்டா இடத்தில் சுவர் கட்டுவதாக கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள், பொதுமக்கள் திருப்போரூர் – செங்கல்பட்டு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதித்தது. பரபரப்பு நிலவியது. தகவலறிந்து திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், எஸ்ஐ அசோக சக்கரவர்த்தி, திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மதிற்சுவர் கட்டும் பணி தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் நடக்கிறத. அதை எங்களால் தடுக்க முடியாது. அரசுக்கு சொந்தமான பாசன வாய்க்கால், வீராணம் கால்வாய் ஆகியவற்றை ஆக்கிரமித்து கட்டினால் மட்டுமே தடுக்க முடியும். ஆனாலும், தனியார் சொத்தின் ஆவணங்களையும், வருவாய்த்துறை ஆவணங்களையும் சரி பார்த்து நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்….

The post நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து மதிற்சுவர் கட்டும்பணி? விவசாயிகள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,Road Blockade ,Dinakaran ,
× RELATED கேளம்பாக்கம் அருகே மனைவி கழுத்து...