×

ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் சேதம்: போக்குவரத்து கடும் பாதிப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் ஏற்பட்ட திடீர் வௌ்ளப்பெருக்கால் தரைப்பாலம் சேதமடைந்தது. பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் தரைப்பாலத்தின் சேதமடைந்த பகுதி சீரமைக்கப்பட்டது. இந்த பணியை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார். ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே ரூ.27 கோடியில் புதிய பாலம்  கட்டப்படுவதால், போக்குவரத்திற்காக தற்காலிகமாக மாற்று தரைப்பாலம்   அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநிலம் பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. இதனால் ஆந்திர மாநிலம் நந்தனம் மலைப்பகுதியில் இருந்து மழைநீர் ஆரணியாற்றில் கலந்தது. இந்த தண்ணீர் ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் வந்த மழைநீரால் தற்காலிக தரைப்பாலத்தின் மையப்பகுதியில் போடப்பட்ட ராட்சத பைப்புகளில் நடுவில் ஓட்டை விழுந்தது. இதனால் நேற்று பிற்பகல் 2 மணிக்கு திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து தற்காலிக பாலத்தை சீரமைத்தனர். பின்னர் மாலை 4 மணிக்கு கார், பைக் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் கனரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.  இதற்கிடையில், நேற்று மாலை 5 மணியளவில் தரைப்பாலத்தில் மற்றொரு இடத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  இதையடுத்து, மீண்டும் அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி நடைபெற்றது. தகவலறிந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் அங்கு வந்து சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த கோரி கேட்டுக்கொண்டார். அப்போது, ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி, சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும், ஆரணியாற்றில் வரும் மழை தண்ணீர் சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் இருந்து ஊத்துக்கோட்டை ஈசா ஏரிக்கு 300 கன அடி வீதம் திறந்துவிடப்பட்டது. எனவே, ரூ.27 கோடி செலவில் புதிதாக கட்டப்படும் பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கிராமங்களில் புகுந்த வெள்ளநீர்பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டில் 115 மில்லி மீட்டர் கன மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பியது. ஆந்திர எல்லை பகுதியில் உள்ள சானா குப்பம் கிராமத்தில் தாழ்வான பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.இதேபோல் நெடியம், பெருமாநல்லூர் ஆகிய கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கிராம மக்கள் கடும் அவதிகுள்ளாகினர். மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகள் ஊராட்சி மன்றம் மற்றும் வருவாய் துறை சார்பாக மழைநீர் அகற்றும் பணியில் நடைபெற்று வருகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று வட்டாட்சியர் சரவணன் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்….

The post ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் சேதம்: போக்குவரத்து கடும் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Uthukkotta Araniyad ,Poothukkotta ,Poothukkotta Paraniyad ,Euthukkotta Aranyad ,Dinakaran ,
× RELATED செங்கரை காட்டுச்செல்லி அம்மன்...