×

குடிநீர், பஸ், கழிவறை வசதிகள் இல்லை சிறைக்குளம் மக்களின் குறைகள் தீருமா? அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சாயல்குடி : சிக்கல் அருகே சிறைக்குளம் ஊராட்சியில் குடிநீர், அங்கன்வாடி மையம் கட்டிடம், பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் எனமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கடலாடி ஊராட்சி ஒன்றியம், சிறைக்குளம் ஊராட்சியில் சிறைக்குளம், மத்தியல், ஆய்க்குடி, ராஜாக்காள்பாளையம், வல்லப்பாடல், காடராஜபுரம், ஆத்தோடை, ஆர்.புதூர், ஆத்தோடை, சிறைக்குளம் காலனி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு குடிநீர், நூலகம், பஸ் போக்குவரத்து, அங்கன்வாடி மையம் கட்டிடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட கோரி கடந்த 10 ஆண்டுகளில் பலமுறை அரசு அலுவலகங்களில் மக்கள் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.  இது குறித்து சிறைக்குளம் கிராமமக்கள் கூறும்போது, ‘‘இப்பகுதி கிராமமக்கள் பெரும்பாலும் விவசாயிகள், 100 வேலை உள்ளிட்ட கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த கிராமத்திற்கு காவிரி கூட்டுகுடிநீர் வருவதில்லை.  குடிநீர் தேக்க தொட்டி சேதமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. லாரியில் விற்கும் குடிநீரை ரூ.6க்கு வாங்கி பயன்படுத்துகிறோம். சிக்கலில் இருந்து சிறைக்குளம் வழியாக வாலிநோக்கத்தில் தரமான சாலை வசதி உள்ளது. இந்த வழித்தடத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. ஆனால் அரசு பஸ் வசதி கிடையாது. இதனால் மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி கூட்ட நெரிசலில் சிக்கி, ஆபத்தாக ஆட்டோக்களில் சென்று வருகின்றனர். இதனை போன்று சிறைக்குளம், ராஜாக்கள்பாளையத்திலுள்ள அங்கன்வாடி மைய கட்டிடங்கள் முழுமையாக சேதமடைந்து விட்டது. இதனால் சேதமடைந்த நிலையிலுள்ள பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தின் ஒரு சிறிய அறையில் குழந்தைகள் ஆபத்தான நிலையில் படித்து வருகின்றனர்.இதனை போன்று வி.ஏ.ஓ அலுவலக கட்டிடமும் சேதமடைந்து விட்டது. இதனால் வி.ஏ.ஓக்கள் கிராமத்திற்கு வருவது கிடையாது. அவர்களை தேடி அலையும் நிலை உள்ளது. வீடுகளுக்கு கட்டி கொடுக்கப்பட்ட தனிநபர் கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் பெண்கள் இரவு நேரங்களில் மட்டுமே இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலை உள்ளது.  நூலகத்திலிருந்த புத்தகங்கள், தளவாட பொருட்கள் மாயமாகிவிட்டது. கட்டிடம் பாழடைந்து கிடக்கிறது. விடுமுறை நாட்களில் இளைஞர்கள், மாணவர்கள் படிப்பதற்கு சிரமப்படுகின்றனர். கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தரக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக பலமுறை கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம், சிக்கல் மின்சாரவாரியம், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு துறை அலுவலகங்களில்  பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அடிப்படை வசதியை அரசு நிறைவேற்றி தரவேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post குடிநீர், பஸ், கழிவறை வசதிகள் இல்லை சிறைக்குளம் மக்களின் குறைகள் தீருமா? அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Jail Kulam ,Sayalkudi ,Anganwadi ,Jailkulam ,Sikal ,Dinakaran ,
× RELATED சாயல்குடி குடிசை மாற்று வாரிய...