×

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இணையதளம் மூலம் கட்டிட அனுமதி: விரிவான வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா அனைத்து மாநகராட்சி, நகராட்சி, மண்டல இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய, மாநில அரசின் கொள்கை முடிவுகளின்படி கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தவும், கட்டிட விண்ணப்பங்களின் மீது இறுதி முடிவு எடுத்துக்கொள்ளும் பரிசீலனைக்கான கால அளவினை குறைக்கவும், பொதுமக்கள் கட்டிட விண்ணப்பங்களையும், ஆவணங்களையும், உரிமம் கட்டணங்களையும் தங்களது இருப்பிடத்திலிருந்தே இணையதளம் வாயிலாக செலுத்திட மென்பொருள் உருவாக்கப்பட்டு அனைத்து பணிகளும் இணையதளம் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். தொழில்சார்ந்த வல்லுநர்களை தகுதியின் அடிப்படையில் பதிவு செய்து கட்டணங்கள் வசூலித்தல், பதிவு சான்று அளித்தல், ஒவ்வொரு ஆண்டும் புதுநிலைப்படுத்தி ஏப்ரல் மாதத்தில் மன்றத்தின் பார்வைக்காக வைத்து மற்றும் இணையதளத்தில் பதிவிடுதல் மற்றும் தவறு செய்யும் தொழில் சார்ந்த வல்லுநர்களின் உரிமம் ரத்து செய்வது குறித்தான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் திட்ட மற்றும் கட்டிட அனுமதி உத்தரவுகளை விரைந்து வழங்கிடும் வகையில் தானியங்கி மென்பொருள் வாயிலாக கட்டண விகிதங்களை கணக்கீடு செய்து இணையதளம் மூலம் வசூலிக்க மென்பொருளில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறிய குடியிருப்பு கட்டிடங்கள் கட்டும் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக 1200 சதுரடி பரப்பளவிலான குடியிருப்பு கட்டிடங்களுக்கு கள ஆய்வின்றி 10 நாட்களுக்குள்ளாக அனுமதி வழங்குவது, அலுவலர்கள் தவறும் நிலையில் ஒப்புதலளிக்கப்பட்டதாக கருதி கட்டணங்கள் கணக்கீடு செய்யும் நிலைக்கு மாற்றப்படும். 10 ஆயிரம் சதுரடி பரப்பளவு வரைவு திட்ட அனுமதி வழங்கிட உள்ளாட்சிகளுக்கு அதிகார பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதிக்கான நடைமுறையை எளிமைப்படுத்த தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்-2019 ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதியினை உரிய காலத்திற்குள் சீரிய முறையில் வழங்கிட மாநகராட்சி, நகராட்சிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வழங்கப்படுகிறது. அதன்படி, கட்டிட விண்ணப்பங்கள் மற்றும் வரைபடங்களை தயார் செய்ய தகுதி வாய்ந்த தொழில் சார்ந்த வல்லுநர் பதிவுக்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே மெற்று பதிவு சான்று வழங்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட விவரங்கள் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு ஒவ்வொரு மாதமும் சமர்ப்பிக்க வேண்டும். பொதுமக்கள் கட்டிட விண்ணப்பங்களையும், இணைப்பு ஆவணங்களையும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் விண்ணப்பங்களை நேரடியாக சமர்ப்பிக்கும் முறை முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. கட்டிட விண்ணப்பங்களை http://tnurbanepay.tn.gov.in இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. முழுமையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்துள்ளதை நகரமைப்பு ஆய்வாளர் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். ஆணையர் இணையதளத்தில் ஒப்புதல் அளித்தவுடன், இணையதளம் வாயிலாக கட்டணங்கள் கேட்பு மின்னஞ்சல் வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் மனுதாரருக்கு அனுப்பப்படும். கட்டணங்கள் 15 நாட்களுக்குள் செலுத்த தவறினால் கோப்பு கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக அடுத்த 7 நாட்களில் மனுதாரருக்கு தகவல் தெரிவித்து கோப்பு முடிக்கப்படும். பொதுமக்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரியாக இருப்பின் 3 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். விண்ணப்பத்தில் கூறியவாறு கட்டிடம் கட்டுவதை உறுதி செய்ய வேண்டும். தவறும் நபர்களின் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற துறைகளின் பெயரில் வசூலிக்கப்படும் கட்டணங்களை நகராட்சி/மாநகராட்சியின் இதர செலவுகளுக்கு பயன்படுத்துவதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையர், கணக்கர் மற்றும் பொறுப்பானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இணையதளம் மூலம் கட்டிட அனுமதி: விரிவான வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டது தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Municipal Executive Director ,Ponnaya ,Organizations ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...