×

ஸ்ரீநகரில் காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொலை: துணிவிருந்தால் என்னுடன் விவாதம் நடத்த தயாரா? தீவிரவாதிகளுக்கு டாக்டர் மகள் பகிரங்க சவால்

புதுடெல்லி: ஸ்ரீநகரில் காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது மகள் தீவிரவாதிகளுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். துணிவிருந்தால் என்னுடன் விவாதம் நடத்த தயாரா என்று அவர் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே இக்பால் பார்க் பகுதியில் மருந்து கடை நடத்தி வந்த காஷ்மீர் பண்டிட் மக்கன் லால் பிந்த்ரூ (68), பேல்பூரி வியாபாரி வீரேந்திர பஸ்வான், டாக்சி டிரைவர் லோன் ஆகியோர் கடந்த 4ம் தேதி தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டனர்.இந்த சம்பவத்தில் உயிரிழந்த மக்கன் லாலின் மகளும் டாக்டருமான ஷிரத்தா பிந்த்ரூ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அப்பாவி மக்களை கொல்வதன் மூலம் கோழைத்தனத்தை தீவிரவாதிகள் வெளிப்படுத்துகின்றனர். என் தந்தை காஷ்மீர் பண்டிட். எப்போதும் சாக மாட்டார். அவரது ஆன்மாவாகவும், மக்கள் மனதிலும் எப்போதும் நிறைந்திருப்பார். அவரது உடலைத்தான் தீவிரவாதிகளால் கொல்ல முடியும். ஆன்மாவை அல்ல. தீவிரவாதிகளுக்கு துணிவு இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த வரட்டும். அதன்பிறகு அவர்களுக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்யட்டும். இந்த தீவிரவாதிகள் கற்களைவீசி அப்பாவி மக்களைத்தான் கொல்ல முடியும். அதை மட்டும்தான் செய்ய முடியும். நேருக்கு நேர் விவாதம் நடத்த துணிச்சல் கிடையாது. என் தந்தை போர் வீரனை போல வாழ்ந்தவர். அதனால் நான் அழ மாட்டேன். சிரித்த முகத்துடன் இருப்பேன்.என் தந்தை பயமின்றி வாழ்ந்தார். காஷ்மீரில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருந்தபோதும் நகரில் உள்ள மருந்துக் கடையை மூட மறுத்தார். அவர் வெற்றியாளராக வாழ்ந்து சென்றுள்ளார். அதனால் நான் அழப்போவதில்லை. அதுதான் அவருக்கு நான் செலுத்தும் மரியாதை. பயமின்றி வாழ வேண்டும் என்பதைதான் என் தந்தை எனக்கு கற்று தந்தார். ‘உங்களுக்கு பயம் இல்லையா?’ என்று என் தந்தையை அடிக்கடி கேட்பேன். அதற்கு அவர், ‘‘பயத்தில் வாழ்ந்தால், ஒவ்வொரு நாளும் நான் வாழ்வது மிகவும் கடினம். நான் இறந்தால், அது ஒரு முறைதான்’’ என்று கூறுவார். எதற்காக பயப்பட வேண்டும். பயம் இல்லாமல் இருப்பதுதான் வாழ்க்கை. பயம்தான் மரணம். இவ்வாறு அவர் கூறினார். இவரது பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

The post ஸ்ரீநகரில் காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொலை: துணிவிருந்தால் என்னுடன் விவாதம் நடத்த தயாரா? தீவிரவாதிகளுக்கு டாக்டர் மகள் பகிரங்க சவால் appeared first on Dinakaran.

Tags : Kashmir Pandit ,Srinagar ,New Delhi ,Kashmiri ,Pandit ,Srinagar.… ,Dinakaran ,
× RELATED டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் விமான...