×

செழியநல்லூர் குளத்தில் பராமரிப்பின்றி உடைந்த மதகால் வீணாக வெளியேறுகிறது தண்ணீர்-கண்டுகொள்ளாத அதிகாரிகள்

நெல்லை :  நெல்லை அருகே செழியநல்லூர் குளத்தில் பராமரிப்பின்றி உடைந்த மதகால் தண்ணீர் வீணாக வெளியேறி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியம் கங்கைகொண்டான் அடுத்துள்ள வடக்கு, தெற்கு செழியநல்லூர் கிராமம் உள்ளது. இங்குள்ள செழியநல்லூர் குளத்திற்கு சிற்றாறு மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. மேலும் பருவமழை காலத்தில் காட்டாற்று வெள்ளம் மூலம் குளம் நிரம்பி காணப்படும். செழியநல்லூர் குளத்தை நம்பி சுமார் 1500 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. பருவமழை காலத்தில் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் நெல், வாழை பயிர் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையை நம்பி விவசாயத்தில் ஈடுபடும் இப்பகுதி மக்களுக்கு விளைச்சல் வீடு வந்து சேரும் கனவு, எப்போதும் கானல் நீராகவே உள்ளது. பொதுப்பணித்துறை அலட்சிய போக்கே இதற்கு காரணமென விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். செழியநல்லூர் குளத்தில் குடிமராமத்து பணிகள் செய்யாததால், பருவமழை காலத்தில் குளத்தில் தண்ணீர் தேங்கினாலும் சேதமடைந்த மதகுகள் வழியாக மழைநீர் வீணாக வெளியேறுவது வாடிக்கையாகி விட்டதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.  கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் சிற்றாற்றில் கரைபுரண்ட வெள்ளத்தால், செழியநல்லூர் குளம் நிரம்பி ததும்பியது. குளம் நிரம்பிய மகிழ்ச்சி, அப்பகுதி விவசாயிகளிடம் நீண்டநாள் நீடிக்கவில்லை. சேதமடைந்த மதகுகள், மடைகள் வழியாக பீறிட்டு வெளியேறி வீணாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மணல் மூட்டைகள், வைக்கோல் கொண்டு மதகுகளில் ஏற்பட்டுள்ள உடைப்பை விவசாயிகள் அடைத்தனர். இருப்பினும் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாவதை தடுக்க முடியவில்லை. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பருவமழையின் போது செழியநல்லூர் குளத்தில் பெருகும் தண்ணீர் பழுதான மடைகள், மதகுகள் வழியாக வீணாவதை தடுக்க குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறையிடம் முறையிட்டும் கண்டுகொள்ளப்படாத நிலை தொடர்கிறது. இதனால் தற்போது குளம் நிரம்பியும் மதகுகள், மடைகள் சேதமடைந்து காணப்படுவதால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.பருவமழையை நம்பி நெல், வாழை பயிர் செய்துள்ளோம். தற்போது குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் பயிர்களை பாதுகாக்க மணிக்கு ரூ.200 செலவு செய்து கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது, என்றார்….

The post செழியநல்லூர் குளத்தில் பராமரிப்பின்றி உடைந்த மதகால் வீணாக வெளியேறுகிறது தண்ணீர்-கண்டுகொள்ளாத அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Chediyanallur pond ,Nellai ,Dinakaran ,
× RELATED நெல்லை மாநகர பகுதியில் சாலையில்...