×

திருச்சி அருகே தாயின் அழுகிய உடலை வைத்து ஒரு வாரம் ஜெபம் செய்த மகள்கள்: கைப்பற்ற வந்த போலீசாருடன் வாக்குவாதம்

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சொக்கம்பட்டியை சேர்ந்தவர் மேரி (75). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியையான இவர், அப்பகுதியில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு வீட்டில் திருமணமாகாத தனது மகள்களான ஜெசிந்தா(43), ஜெயந்தி(40) ஆகியோருடன் வசித்து வந்தார். இதில் 3 பேரும் கிறிஸ்தவ மதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்துள்ளனர். பெரும்பாலான நேரங்களில் வீட்டில் 3 பேரும் சேர்ந்து ஜெபம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மேரியை பார்க்க உறவினர் ஒருவர், கடந்த 2 நாட்களுக்கு முன் புதுச்சேரியில் இருந்து சொக்கம்பட்டி வந்தார். பின்னர் மேரி வீட்டிற்கு சென்ற போது, அங்கு இறந்த போன மேரியின் உடலை வீட்டில் வைத்து 2 மகள்களும் ஜெபம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதை பார்த்த உறவினர் அதிர்ச்சியில் உறைந்தார். உடனே உறவினர், இறந்த மேரி உடலை அடக்கம் செய்ய வேண்டும் என இரண்டு மகள்களிடம் தெரிவித்தார். தங்களது தாயை உயிர்ப்பிக்க ெஜபம் செய்து கொண்டு இருக்கிறோம். நீங்கள் வீட்டை விட்டு வெளியேறுங்கள் என கூறினர். வெளியே செல்ல மறுத்த உறவினரை, வெளியே அனுப்பி கதவை பூட்டி விட்டு மீண்டும் இருவரும் ஜெபத்தை தொடர்ந்தனர். இதையடுத்து அந்த உறவினர், அப்பகுதி மக்களிடம் நடந்த சம்பவத்தை கூறி விட்டு புதுச்சேரி சென்று விட்டார்.இதுகுறித்து அப்பகுதி மக்கள், மணப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் நேற்றுமுன்தினம் இரவு அங்கு சென்ற போலீசார், மேரி வீட்டின் கதவை தட்டினர். ஆனால் மகள்கள் இருவரும் உடனடியாக கதவை திறக்கவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து கதவை திறந்தனர். போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, மேரியின் உடல் அழுகிய நிலையில் அவர் மீது பைபிள் வைத்து ஜெபம் செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார், மேரியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். உடனே இரண்டு மகள்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் போலீசார் அவர்களிடம் பக்குவமாக பேசி, மேரியின் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மேரி இறந்து ஒரு வாரமாகி இருக்கும் என்று தெரிவித்தனர். உடனே இரண்டு மகள்களும், எங்கள் தாய் மேரி இறக்கவில்லை. நாங்கள் ஜெபம் செய்தால் அவர் உயிர்த்தெழுவார் என கூறி டாக்டர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அங்கிருந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சத்திரப்பட்டி விஏஓ பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மேரியின் உடலை அவரது மகள்கள், கிராம மக்கள் எதிர்ப்பையும் மீறி அவர்கள் வீட்டின் பின்புற பகுதியில் அடக்கம் செய்தனர்….

The post திருச்சி அருகே தாயின் அழுகிய உடலை வைத்து ஒரு வாரம் ஜெபம் செய்த மகள்கள்: கைப்பற்ற வந்த போலீசாருடன் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Manaparai ,Mary ,Chokambatti ,Dinakaran ,
× RELATED தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்த மாணவன் மீட்பு