×

பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு திரவ பொருட்களை சேமிக்கும் குடுவை, ஓடுகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டை அகழாய்வில் திரவ பொருட்களை சேமிக்கும் குடுவையின் அடிப்பாகம் மற்றும் பிணைப்பு முகட்டு ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் கடந்த வாரம் முதற்கட்ட அகழாய்வுப்பணி நிறைவடைந்தது. இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையின் நான்கு புறவாயில்கள், வழிபாட்டு ஆலயங்கள், உயர்ந்த கோட்டைச்சுவர், கொத்தளத்தின் வடிவம், அகக்கோட்டையின் மையத்தின் மேற்புற அரண்மனைமேடு, கிழக்குப்புற வாவிகுளம் என ஒட்டுமொத்த கட்டுமான அமைப்பும் தமிழகத்தின் வேறெங்கும் காண இயலாதவாறு சங்ககால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அதே வடிவமைப்புடன் காணப்படுகிறது. பொற்பனைக்கோட்டையின் அரண்மனை மேட்டுப்பகுதியில் மேலாய்வு மேற்கொண்டபோது ஆம்போரா குடுவையை ஒத்த சுடுமண் குடுவையின் அடிப்பாகத்தை கண்டறிந்து தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் அகழாய்வு இயக்குனர் இனியனிடம் ஒப்படைக்கப்பட்டது.ரோம், ஸ்பெயின், இத்தாலி நாடுகளிலிருந்து ஆலிவ் எண்ணெய், ஒயின் உள்ளிட்ட திரவப்பொருட்கள் சிறப்பு வடிவிலான ஆம்போர குடுவைகளில் பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வணிகம் செய்யப்பட்டு உள்ளதற்கான ஏராளமான சான்றுகள் உலகம் முழுவதும் கிடைத்துள்ளன. இந்தியாவில் குஜராத்தில் துவாரகா, கேரளாவில் பட்டிணம், புதுச்சேரியில் அரிக்கமேடு, ஆந்திராவில் சந்தரவல்லி, தமிழகத்தில் கரூர் புகளூரிலும், ஆத்தூரிலும், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் இக்குடுவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரான்சில் டூர்நுஸ், குஜராத்தில் துவாரகா, புதுச்சேரியில் அரிக்கமேடு ஆகிய இடங்களில் கிடைத்த ஆம்போரா குடுவைகளின் அடிப்புற அமைப்பை போன்றே பொற்பனைக்கோட்டையிலும் சுடுமண் குடுவையின் அடிப்பரப்பும் உள்ளது. இருப்பினும் குடுவையை உருவாக்க பயன்படுத்தப்பட்ட களிமண் வகையை பொறுத்தே வெளிநாட்டிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டதா? என உறுதி செய்ய இயலும். மேலும் இது உள்நாட்டு களிமண்ணில் தயாரிக்கப்பட்டு திரவப்பொருட்களை சேமிக்கும் குடுவையாக பயன்படுத்தப்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது.நான்கு வாயிற்பகுதிகளிலும் பாதுகாப்பு அறைகள் இருந்ததற்கான செங்கல் கட்டுமானங்களின் அடிப்பகுதியை காணமுடிகிறது. கோட்டையின் மேற்புற பகுதியில் எமது குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட சுடுமண்கூரை ஓடுகள், ஆதிச்சநல்லூரில் 2020-ம் ஆண்டு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அதே வடிவத்துடனும் நீர்வடிவதற்கான வரிப்பள்ளம், ஆணிக்குமிழ் பொருத்துவதற்கான துளை உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் காணப்படுகிறது. தமிழகத்தில் ஆதிச்சநல்லூரிலும், கீழடியிலும் கண்டெடுக்கப்பட்ட கூரைஓடுகளின் வடிவமைப்பையொத்த கூரைஓடுகள் பொற்பனைக்கோட்டையிலும் காணப்படுவது சங்ககால கட்டுமான தொழில்நுட்ப தொடர்பில் ஒருமித்திருந்ததை உணர்த்துகிறது….

The post பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு திரவ பொருட்களை சேமிக்கும் குடுவை, ஓடுகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukkotta ,Ponpanicotta ,Pudukkotai District ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...