×

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா மாரடைப்பால் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சேலம்:  சேலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகனும், திமுக தேர்தல் பணிக்குழு செயலாளருமான வீரபாண்டி ராஜா நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சேலத்தை சேர்ந்த முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்-ரங்கநாயகி தம்பதியின் இளைய மகன் வீரபாண்டி ராஜா என்ற ராஜேந்திரன் (57). திமுக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். நேற்று (2ம் தேதி) அவருக்கு பிறந்தநாள் என்பதால், அதிகாலையிலேயே வாழ்த்து தெரிவிக்க சேலம் பூலாவரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களும், திமுகவினரும் திரண்டிருந்தனர்.இதையடுத்து பூலாவரி தோட்டத்தில் உள்ள தனது தந்தையின் சிலைக்கு மரியாதை செலுத்த, வீரபாண்டி ராஜா புறப்பட்டார். அப்போது, வீட்டில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கட்சியினர் உடனடியாக அவரை மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் ஏற்கனவே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். பிறந்த நாள் வாழ்த்து கூற வந்து, அவரது இறப்பு செய்தி கேட்ட தொண்டர்களும், பொதுமக்களும் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து, பூலாவரியில் உள்ள இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. தகவலறிந்து, நேற்று மாலை 4 மணிக்கு, மதுரையில் இருந்து தனி விமானத்தில் சேலம் வந்த திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், பூலாவரி இல்லம் சென்று, வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கம் தாளாமல் கதறி அழுத குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் கூறினார். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, பழனிவேல்தியாகராஜன், சாமிநாதன், மகேஷ் பொய்யாமொழி, பன்னீர்செல்வம், மதிவேந்தன், துணை சபாநாயகர் பிச்சாண்டி, முன்னாள் அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், பழனியப்பன், என்கேபி ராஜா, காந்திச்செல்வன், சுப்புலட்சுமி ஜெகதீசன், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், எம்பிக்கள் பார்த்திபன், ராஜேஷ்குமார், பொன்கவுதமசிகாமணி, கதிர்ஆனந்த், அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். சேலம் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பொறுப்பு வகித்த வீரபாண்டி ராஜா, பிறகு கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றினார். 2006ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 மற்றும் 2016ல் தேர்தலில் மீண்டும் வீரபாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.  தந்தையுடன் இணைந்து திமுக சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர் வீரபாண்டி ராஜா. எம்ஏ சமூகவியல் பட்டம் பெற்ற இவர், விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இதேபோல் கல்விச் சேவையிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். மறைந்த வீரபாண்டி ராஜாவுக்கு சாந்தி என்ற மனைவியும், மலர்விழி செந்தில் ஆனந்த், கிருத்திகா ஜெயரத்னா என்ற மகள்களும் உள்ளனர். இன்று காலை 10 மணியளவில், பூலாவரியில் உள்ள தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ராமதாஸ் இரங்கல்: வீரபாண்டி ராஜா மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.  தூண் சாய்வது போல….முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:  சேலத்து  சிங்கம் வீரபாண்டியாரின் மகனும் சேலம் மண்டலத்தில் கழகம் வளர்க்கும்  வீரனாகவும் வலம் வந்தவர் வீரபாண்டி ராஜா. இனிமையாய் பழகியும்  அருமையான குணத்தாலும் அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர் ராஜா. எந்த  பொறுப்பை கொடுத்தாலும் அதனை திறம்பட செய்து முடிக்க கூடியவர்.  இளைஞரணி  மாவட்ட அமைப்பாளர், மாவட்ட செயலாளர், தேர்தல் பணிக்குழு செயலாளர் என கழக  பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டதோடு சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்பட  மக்கள் பணியாற்றியவர். 2 நாட்களுக்கு முன்னால் சேலத்துக்கு அரசு விழாவுக்கு  சென்றிருந்தபோதுகூட வீரபாண்டி ராஜாவை சந்தித்தேன். அன்போடு  பேசிக்கொண்டிருந்தேன். அந்த வெள்ளை உள்ளம் கொண்ட புன்சிரிப்பை மறக்க  முடியவில்லை. மிக இளமை காலத்தில் செழியனை இழந்தோம். மருத்துவமனை வாசலில்  கலைஞர் வாய் விட்டு கதறும் அளவுக்கு நம்மை விட்டு பிரிந்தார் அண்ணன்  வீரபாண்டியார். இதோ இப்போது வீரபாண்டி ராஜா. வீரபாண்டியார் குடும்பத்துக்கு  என்ன ஆறுதல் சொல்வது? என்னை நானே எப்படி தேற்றி கொள்வது? வீரபாண்டி ராஜா  போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல, தூண் சாய்வது போல. எந்நாளும் அவர்  புகழ் நிலைத்திருக்கும். கழக தொண்டர்கள் மனதில் எந்நாளும் ராஜா வாழ்வார்.  வீரபாண்டியார் குடும்பத்துக்கும் கழக செயல்வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்….

The post முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா மாரடைப்பால் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Former Minister ,Veerabandi Arumukam ,Dizhagam Election Commission ,Veerabandi Raja ,Chief Minister ,MJ G.K. Tribute ,Stalin ,Salem ,Minister ,Veerabandi Arumugam ,Dizhagam Election Task Commission ,B.C. G.K. ,
× RELATED அதிமுக அணையா விளக்கு ஜெயலலிதா ஆன்மா...