×

அதிகாலையிலேயே சென்னைக்கு செல்லலாம் அந்தியோதயா ரயிலின் வேகம் மீண்டும் அதிகரிப்பு

நெல்லை: நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரயிலின் வேகம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அந்த ரயில் காலை 6 மணிக்குள் தாம்பரம் செல்ல உள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில்  நெல்லை – தாம்பரம் இடையே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது. முழுக்க, முழுக்க முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்டு அந்தியோதயா ரயில் இயக்கப்பட்டதால், பண்டிகை காலங்களில் பலரும் இந்த ரயிலால் பயன் அடைந்தனர். இந்நிலையில் இந்த ரயில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் முதல் நெல்லையில் இருந்து நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.நாகர்கோவிலில் மாலை 3.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், கடலூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தை காலை 7.35 மணிக்கு சென்று சேருகிறது. அந்தியோதயா எக்ஸ்பிரஸ் குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட்டாலும், இந்த ரயிலின் பயண நேரம் அதிகமிருப்பதாக தொடர்ந்து பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இந்த ரயில் தொடங்கப்பட்டபோது தாம்பரத்திற்கு காலை 9.45 மணிக்கு சென்று சேர்ந்தது. பின்னர் நேற்று வரை 7.35 மணிக்கு தாம்பரம் சென்று சேர்ந்தது.இன்று(2ம் தேதி) முதல் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் தாம்பரத்திற்கு 5.50 மணிக்கு சென்று சேருகிறது. சுமார் ஒருமணி நேரம் 35 நிமிடங்கள் முன்னதாக சென்னை போய் சேருவதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லையை பொறுத்தவரை அந்த ரயில் புறப்படும் நேரம் மாலை 5 மணியாக மாற்றப்பட்டுள்ளது. பயண கட்டணம் ரூ.240 என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. அந்தியோதயா ரயிலில் விடிவதற்குள் சென்னை செல்லலாம் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

The post அதிகாலையிலேயே சென்னைக்கு செல்லலாம் அந்தியோதயா ரயிலின் வேகம் மீண்டும் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nellai ,Antiyothaya ,Nagercoil ,Tambaram ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...