மேலூர், மார்ச் 28: மதுரை நாராயணபுரத்தில் உள்ள எஸ்இவி மெட்ரிக்குலேசன் பள்ளியில் மாவட்ட அளவிலான ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, நடைபெற்றது. இதில் அனைத்து வயது பிரிவினரும் கலந்து கொண்டனர். இதில் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில், மேலூர் அருகே அ.வல்லாளபட்டி மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் சந்தோஷ் 5 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். 11 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் அ.செட்டியார்பட்டி பள்ளி 5ம் வகுப்பு மாணவிகள் ஹன்சிகா, விசாகலட்சுமி ஆகியோர் தலா 3 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றனர்.
9 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இதே பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவி வேதாஸ்ரீ இரண்டாம் இடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்று திரும்பிய மாணவ, மாணவிகளை அ.வல்லாளபட்டி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், அ.செட்டியார்பட்டி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை, செஸ் பயிற்சி அளித்த இடைநிலை ஆசிரியர் செந்தில்குமார், அ.வல்லாளபட்டி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன், அ.வல்லாளபட்டி சேர்மன் குமரன், உதவி தலைமை ஆசிரியர் வாசிமலை, உடற்கல்வி ஆசிரியர்கள் சேதுபதி ராஜா, அறிவரசன் மற்றும் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், கிராமமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.