தேசிய பாரா பேட்மிண்டன் தமிழக அணி வீரர்கள் சாதனை 15 பதக்கங்கள் வென்றனர்

திண்டுக்கல், மார்ச் 28: உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவில் 5வது தேசிய பாரா பேட்மிண்டன் போட்டி மார்ச் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் 29 வீரர், வீராங்கனைகள், தலைமை பயிற்சியாளர் விஜய் மற்றும் மேலாளர் சிவகுமார் தலைமையில் கலந்து கொண்டனர். இவர்கள் போட்டிகளில் 5 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 15 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். இதில் ஓசூர் நித்யா, மதுரை சந்தியா ஒற்றையர் பிரிவுகளில் தங்கப்பதக்கம் பெற்றனர். சென்னை நீரஜ் சீனிவாசன் வீல் சேர் இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கமும், நாமக்கல் சுதர்சன் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கமும், ஓசூர் நித்ய பெண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர் பிரிவில் 2 தங்க பதக்கமும் வென்றனர்.

சிவகங்கை சிவராசன் ஒற்றையர் பிரிவில் வெள்ளி பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் தங்க பதக்கமும் வென்றுள்ளார். மதுரை சந்தியா பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளார். ஈரோடு ருத்திக் ஆண்கள் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகள் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என 3 வெள்ளி பதக்கமும், விருதுநகர் பிருதிவிராஜ் இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கமும், சென்னை நவீன் சிவகுமார் இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கமும் மற்றும் ஒற்றையர் பிரிவில் வெண்கலமும் பெற்றனர். இவர்களை இந்திய விளையாட்டு ஆணைய முதுநிலை பயிற்சியாளர் பத்ரி நாராயணன். தமிழ்நாடு பாரா பேட்மிண்டன் சங்க தலைவர் அசோக் மற்றும் துணை செயலாளர் சத்யா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

Related Stories: