பழநி வையாபுரிக்குளத்தில் கழிவுநீரை கலக்கும் கட்டிடத்திற்கு ‘சீல்’: நகராட்சிக்கு ஆர்டிஓ பரிந்துரை

பழநி, மார்ச் 28: பழநி வையாபுரிக்குளத்தில் அமலை செடிகள், கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசி வந்தது. இதையடுத்து பழநி ஆர்டிஓ சிவக்குமார் மேற்பார்வையில் வையாபுரிக்குளத்தில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. தன்னார்வலர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் முயற்சியுடன் பொக்லைன் எந்திரம் உதவியுடன் குளத்தின் நீர்ப்பிடிப்பில் தேங்கி கிடக்கும் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வையாபுரி குளத்திற்குள் தூய்மை பணி குறித்த ஆலோசனை கூட்டம் பழனி ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதற்கு ஆர்டிஓ சிவக்குமார் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி, நகராட்சி ஆணையாளர் கமலா, கோவில் துணை ஆணையர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆர்டிஓ பேசுகையில், வையாபுரிக்குளத்தில் கழிவுநீர் விடுவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் திருமண மண்டபங்கள், ஓட்டல்களில் இருந்து நேரடியாக கழிவுநீரை குளத்தில் விடுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டல், மண்டபங்கள் உள்ளிட்ட 130 வணிக நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் குளத்தில் நேரடியாக வணிக நிறுவனங்கள் கழிவுநீரை விட்டால் அவற்றை ‘சீல்’ வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: