சேலம் கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி

சேலம், மார்ச் 28: வாரிசு சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி, கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்த பெண் ஒருவர், திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் விசாரித்தனர். அதில், அவர் மேட்டூர் அடுத்த விருதாசம்பட்டியை சேர்ந்த தேன்மலர் (40) என்பது தெரிந்தது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘எனது தந்தை பழனியப்பா மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். நான்  குழந்தையாக இருக்கும்போதே தாய் மாதம்மாள் இறந்து விட்டார். இதனால் எனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தேன். இதனிடையே எனது தந்தை பார்வதி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு எனது தந்தை பழனியப்பா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அதன்பின்னர் பார்வதி தரப்பினர் வாரிசு சான்றிதழ் வாங்கியுள்ளனர்.

அதில், பழனியப்பாவின் மனைவி பார்வதி என்றும், இவர்களுக்கு நான் உள்பட 3 மகள்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், எனது தாயார் மாதம்மாள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மின்வாரியத்தில் வாரிசு வேலையை கைப்பற்றுவதற்காக முதல் மனைவி இருந்ததை மறைத்து, முறைகேடாக வாரிசு சான்றிதழ் வாங்கியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலகங்களில் நேரடியாக புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், தீக்குளிக்க முயன்றேன்,’’ என்றார்.

Related Stories: