வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயி தற்கொலை முயற்சி செங்கம் அருகே பரபரப்பு பருத்தி விதை வளராமல் சேதம் அடைந்ததால்

செங்கம், மார்ச் 28: செங்கம் அருகே பருத்தி விதை வாங்கி நடவு விதை வளராமல் சேதமடைந்ததால் வேளாண்மை அலுவலகம் முன்பு விஷம் குடித்து விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமஜெயம் விவசாயி. இவர் 2.5 ஏக்கர் நிலத்தில் பருத்தி நடுவதற்காக நிலத்தை உழுது கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பருத்தி விதை கம்பெனியில் 15 கிலோ விதையை வாங்கி நடவு செய்துள்ளார். நடவு செய்து மூன்று மாதங்கள் ஆகியும், சரிவர பருத்தி வளராமல் சேதம் அடைந்ததால் கடன் வாங்கி பருத்தி நடவு செய்த விவசாயி வேதனை அடைந்தார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட வேளாண்மை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், தரமற்ற விதையை வழங்கிய தனியார் பருத்தி விதை கம்பெனி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காமல் அலைக் கழித்து வருவதாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று வேளாண்மை அலுவலகம் முன்பு ‘நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்’ என அதிகாரியிடம் தெரிவித்து விஷம் குடிக்க சென்றார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்த செங்கம் காவல்துறையினர் விவசாயியிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் வேளாண்மை அலுவலகம் முன் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: