×

குமரி விசைப்படகு மீது மோதி விபத்து ஹாங்காங் கப்பல் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் தெற்காசிய மீனவர் தோழமை கலெக்டரிடம் மனு

நாகர்கோவில், மார்ச் 28: குமரி விசைப்படகு மீது மோதி விபத்தை ஏற்படுத்திய  ஹாங்காங் கப்பல் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று தெற்காசிய மீனவர் தோழமை சார்பில் குமரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் சர்ச்சில் தலைமையில் ஹாங்காங் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட  ரூபி விசைப்படகு உரிமையாளர் அந்தோணி தாசன் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள், அவர்களின் உறவினர்கள் குமரி மாவட்ட கலெக்டரிடம்  நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குளச்சல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் பதிவு செய்யப்பட்ட தூத்தூர்  அந்தோணிதாசன் என்பவருக்கு சொந்தமான ‘ரூபி’  என்ற விசைப்படகு தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரளாவை சேர்ந்த 9 மீனவர்களுடன் பிப்ரவரி மாதம் 8ம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர். பிப்ரவரி மாதம் 27ம் தேதி மதியம் 2.30 மணிக்கு ஆழ்கடலில்  மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது அவ்வழியாக  சென்ற  ஹாங்காங் நாட்டை சேர்ந்த  ‘நியூ பிரண்ட்டியர்’ என்ற டேங்கர் கப்பலானது மீனவர்களின் விசைப்படகு மீது திடீரென்று நேருக்கு நேர் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது. இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக படகில் இருந்த 9 மீனவர்களும் உள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்து ஏற்படுத்திய கப்பல் பாதிக்கப்பட்ட மீனவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். மேலும்  விபத்து நடந்த உடன் மும்பையில் உள்ள இந்திய கப்பல் துறை இயக்குனருக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். இந்திய கடலோர காவல் படை மீனவர்களுக்கு உதவுவதற்கு வரும் வரை விபத்து ஏற்படுத்திய கப்பல் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளித்து இருக்க வேண்டும். ஆனால்  தங்களது கடமைகளை எதுவுமே செய்யாமல் கப்பல் மாலுமி விபத்து ஏற்படுத்தி விட்டு துபாய் நாட்டுக்கு கப்பலுடன் தப்பி சென்று விட்டார்.  நடுக்கடலில் உயிருக்கு போராடிய 9 மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும்  அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த செயின்ட் ஆன்றனி என்ற ஷர்லின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மூலம் ஐந்து நாட்களாக கட்டி இழுத்து  தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். சேதமடைந்த ரூபி விசைப்படகு தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்ததும் தண்ணீரில் மூழ்கியது. பாதிக்கப்பட்ட மீனவர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 மருத்துவமனையில் இருந்து குளச்சல் கடலோர காவல் நிலையத்திற்கு மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார்கள் என்ற செய்தியை கூறியும் குளச்சல் கடலோர காவல் நிலைய அதிகாரிகள் முதலில் மீனவர்களிடம் வாக்குமூலம் வாங்க மறுத்தனர். பின்னர் மாவட்ட  கலெக்டரின் உத்தரவின் பேரில் குளச்சல் கடலோர காவல் குழும அதிகாரி குழித்துறை அரசு மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த மீனவர்களிடம் வாக்குமூலம் பெற்றனர். ஆனால் வழக்குபதிவு செய்யவில்லை. ஒன்பது மீனவர்களது உயிர்களுக்கு  பேராபத்தை ஏற்படுத்தி, மீனவர்களுக்கு பல லட்ச ரூபாய் பொருள் இழப்பையும், பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பையும், மனதளவில் மீனவர்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற ஹாங்காங் நாட்டு நியூ பிரண்டியர்  கப்பல் மீதும், கப்பல் மாலுமி மீதும், கப்பல் உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கபட்டு இருந்தது.

Tags : Kumari Barge ,Collision ,Hong Kong ,
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...