×

மதுராந்தகம் பகுதியில் வேளாண் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு

மதுராந்தகம், மார்ச் 27: மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நடந்து வரும் பல்வேறு பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேற்று நேரில் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புக்கத்துறை ஊராட்சியில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தரிசு நில மேம்பாட்டு தொகுப்பை தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு நடவு செய்யப்பட்டுள்ள மா, பலா, கொய்யா ஆகியவற்றையும், நீர் பாசன வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சூரிய மின் சக்தி மோட்டார் செயல்பாட்டையும் பார்வையிட்டார்.

அப்போது, புக்கத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட கோடி தண்டலம் ஏரியின் உபரி நீர் வெளியேறும்போது அதே பகுதியை சேர்ந்த விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், அவ்வாறு பாதிப்பு ஏற்படாதவாறு உபரிநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி பகுதிகளில் சாலைகள், வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும், மண் சாலைகளை சிமென்ட் சாலைகளாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஊராட்சி தலைவர் சொரூபராணி எழிலரசு  சார்பில் வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, பள்ளியகரம் கிராமத்தில் துரைராஜ் என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த ஜி.ஜே.ஜி 31 என்ற ரக வேர்க்கடலை விதை பண்ணையையும், அச்சிறுப்பாக்கம் அருகே துறையூர்  கிராமத்தில் லட்சுமிபதி என்பவரின் நிலத்தில் சொட்டு நீர் பாசன வசதியுடன் பயிர் செய்யப்பட்டுள்ள கரும்பு பயிரையும் இறையன்பு ஆய்வு செய்தார்.
மதுராந்தகம் ஒழுங்குமுறை விற்பனைக்கு கூடத்தில் தொடர் சங்கிலி மேலாண்மை திட்டத்தில் ₹3.90 கோடி மதிப்பில் நடந்து வரும் பணிகளையும் பார்வையிட்டார்.

அப்போது, டிராக்டர், பவர்டில்லர் போன்ற இயந்திரங்களை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கினார். அச்சிறுப்பாக்கம் அருகே பள்ளிப்பட்டு கிராமத்தில் அரசு மானிய உதவியுடன் பால் காளான் உற்பத்தி செய்து வரும் விவசாயியை சந்தித்து உற்பத்தி மற்றும் வியாபாரம் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வேளாண்மை உற்பத்தி ஆணையர் சி.சமயமூர்த்தி, தோட்டக்கலை இயக்குனர் பிருந்தா தேவி, வேளாண் இயக்குனர் அண்ணாதுரை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை இயக்குனர் நடராஜன், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை தலைவர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.

Tags : Chief Secretary ,Theopayan ,Madhuranthakam ,
× RELATED பள்ளிகளில் மாணவர்கள் மன அழுத்தம்...