×

மஞ்சூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை

மஞ்சூர்,  மார்ச் 27: மஞ்சூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும்  காலாவதியான தின்பண்டங்கள் குறித்து பேரூராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில்  ஈடுபட்டார்கள். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை  ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டிஸ்போசல் டம்ளர்கள் மற்றும்  தட்டுகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் தலைமையில்  நேற்று பேரூராட்சி அலுவலர்கள் மஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள பெட்டிகடைகள்,  மளிகை மற்றும் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் ேஹாட்டல், பேக்கரி, டீ  கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை  தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  இதுகுறித்து  செயல் அலுவலர் ரவிக்குமார் கூறியதாவது: மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தல்  பேரில் சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும் கேரி பேக்குகள் உள்ளிட்ட  பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, விற்பனை மற்றும் உபயோகத்திற்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது.

எனவே கேரி பேக்குகள், டிஸ்போசல் டம்ளர் மற்றும்  தட்டுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பதும்,  விற்பனை செய்வதும் மற்றும் உபயோகிப்பதும் குற்றமாகும். தடையை மீறி கேரி  பேக்குகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருப்பவர்கள்  மற்றும் விற்பனையாளர்கள் மீது அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் உணவு பொருட்கள் பாக்கெட்டுகளின் மீது கட்டாயம் உற்பத்தி மற்றும்  காலாவதி தேதி குறிப்பிட்டிருக்க வேண்டும். காலாவதியான பொருட்களை  உடனுக்குடன் அப்புறப்படுத்தி அதை அழிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags : Manjur ,
× RELATED கொடைக்கானல் மஞ்சூர் வனப்பகுதியில்...