நாளுக்குநாள் குவியும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படுமா?

திருச்செந்தூர், பிப்.27: திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாலும், பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அறுபடை வீடுகளில் 2ம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். எழில் கொஞ்சும் கடற்கரையுடன் கோயில் அமைந்துள்ளதால் விடுமுறை தினங்களில் பொதுமக்கள் சுற்றுலா வந்தும் பொழுதை கழிப்பார்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமான திருச்செந்தூரில் வட்டார அளவிலான அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு திருச்செந்தூர், ஆலந்தலை, காயாமொழி, குலசேகரன்பட்டினம், உடன்குடி, தளவாய்புரம், பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், வீரபாண்டியன்பட்டனம், ஆறுமுகநேரி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் இல்லை. தோல் மருத்துவர், மனநல மருத்துவர், பிசியோதெரபி மருத்துவர்களும் இல்லையென கூறப்படுகிறது. இதனால் அவற்றுக்கு சிகிச்சை பெற வருபவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

250 படுக்கை வசதியுள்ள இம்மருத்துவமனையில் 3 தூய்மை பணியாளர்கள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதாக கூறப்படுகிறது. இதனால் வார்டுகளில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மருத்துவ பணியாளர்களில் 10 பணியிடத்துக்கு தற்போது ஒருவர் மட்டுமே பணியில் உள்ளதாகவும், அலுவலக பணியாளர்கள் பற்றாக்குறை நீடிப்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை, காயச்சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்தல் போன்றவற்றிலும் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மகப்பேறு மருத்துவர்கள் 5 பேரில் தற்போது இருவர் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால் உரிய சிகிச்சை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

ஆர்த்தோ பிரிவிலும் மருத்துவர், செவிலியர், உதவியாளர் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. திருவிழா காலங்களில் திருச்செந்தூரில் ஒரேநாளில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவதால் கடலில் குளிக்கும் போது நீரில் மூழ்குவது, நெரிசலில் சிக்கி காயமடைவது போன்றவைகள் நிகழும் போது அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஆனால் போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் இல்லாததால் நெல்லை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் அவல நிலை உள்ளது. எனவே திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூரில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி வரும் அரசு, பெருகி வரும் மக்கள் தொகை, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை நியமித்து மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு கூறுகையில், கோயில் நகரமான திருச்செந்தூருக்கு நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை. டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைத்திலும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அவசர தேவைக்கு சிகிச்சை பெற வருபவர்கள் கூட நெல்லை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால் நோயாளிகள் உயிரிழப்பு ஏற்படுவதும் தவிர்க்க முடியதாகி விடுகிறது. எனவே அரசு போர்க்கால அடிப்படையில் பணியாளர்களை நியமித்து மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: