வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு

நாமக்கல், மார்ச் 27: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பு அளிக்க காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகள், செங்கல் சூளைகள், நூற்பாலைகளில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கி, பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மாதம் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.

இதனால் தமிழகத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால், சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ பொய்யானது என்பது உடனடியாக தெரியவந்தது. சமூக வலைதளங்களில் இது போன்ற போலியான வீடியோவை பரப்பியவர்களை போலீசார் கைது செய்தனர். இருந்த போதிலும், தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் இடையே, அச்சம் ஏற்பட்டது.

இந்நிலையில், நாமக்கல் பகுதியில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளிலும் பணிபுரியும், வடமாநில தொழிலாளர்கள் அச்சமின்றி பணிபுரிய, மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள், அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு போலீசார் நேரில் சென்று, அங்குள்ள வடமாநில தொழிலாளர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவர் சிங்கராஜ் கூறியதாவது:

நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், ஏதேனும் அச்ச உணர்வுடன் இருந்தால், அது பற்றி அருகாமையில் உள்ள காவல்நிலையங்களில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும். பண்ணையாளர்கள் விருப்பப்பட்டால், காவல்துறையினர் நேடியாக கோழிப்பண்ணைகளுக்கு வந்து, வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசி, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி, வேண்டிய உதவிகளை செய்துகொடுப்பார்கள்.

இதன் மூலம் தொழிலாளர்களிடம் உள்ள அச்சத்தை போக்க உள்ளனர். எனவே, வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள், தங்கள் பணியாளர்களுக்கு காவல்துறை மூலம் அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்க விரும்பினால், நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியனை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: