காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் 27வது பொதுக்குழு கூட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் 27-வது பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் டாக்டர் புவனேஸ்வரி நஞ்சப்பன் தலைமை வகித்தார்.கூட்டத்தில், 2023-ம் ஆண்டுக்கான தலைவர் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் மற்றும் எதிர்காலப் பணிகள் திட்டமிடுதல் குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியனின் மாநிலத் தலைவராக டாக்டர் புவனேஸ்வரி நஞ்சப்பன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொழிற்சாலைகளிலும், கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கும், வெளிமாநில தொழிலாளர்களுக்கும் சிறப்பு முகாம் மூலம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பது.இந்திய அரசியல் சாசனத்தில் பேச்சுரிமை கருத்துரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில் அவதூறு வழக்கு தாக்கல் செய்து ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை மற்றும் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து செய்யப்பட்ட தகுதி நீக்கம் ஆகியவற்றை வன்மையாக கண்டிப்பதுடன், தகுதி நீக்கத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மக்களவை உறுப்பினர் பதவியை உடனடியாக ராகுல் காந்திக்கு மீண்டும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் பொதுச் செயலாளர் செங்கை கண்ணன், ஆலோசகர் சத்தியபாலன், துணைத் தலைவர்கள் மற்றும் மாநில, மாவட்ட பொதுக்குழு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: