லாட்ஜ்களில் இருந்து குப்பைகளை வெளியே கொட்டினால் லைசென்ஸ் ரத்து ஆய்வு செய்த கமிஷனர் எச்சரிக்கை வேலூர் மாநகராட்சியில் பகுதிகளில் உள்ள

வேலூர், மார்ச் 25: வேலூர் மாநகராட்சியில் உள்ள லாட்ஜ்களில் இருந்து குப்பைகளை வெளியே கொட்டினால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று ஆய்வு செய்த கமிஷனர் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்திற்கு உட்பட்ட காகிதப்பட்டறை, ஆற்காடு சாலை, காந்திரோடு, பாபுராவ் ேபான்ற பகுதிகளில் கமிஷனர் ரத்தினசாமி நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காகிதப்பட்டறை மா.ப.சாரதி தெருவில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக மாடுகள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் அசுத்தம் செய்யப்பட்டு இருந்தது. இதை கண்ட கமிஷனர் உடனடியாக அந்த மாட்டின் உரிமையாளரை அழைத்து, மாடுகளை இனிமேல் இங்கு கட்டக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து காந்திரோடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது லாட்ஜ்களில் இருந்து குப்பைகளை இரவு நேரங்களில் கொண்டு வந்து தெருக்களில் கொட்டிவிட்டு செல்வதாகவும், இதனால் தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக லாட்ஜ் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து பேசினார். அப்போது, லாட்ஜ்களில் குவியும் குப்பைகளை சேகரித்து வைத்தால், மாநகராட்சி ஊழியர்கள் வந்து பெற்றுக்கொள்வார்கள். வெளியே கொட்டினால் அவர்களின் லாட்ஜ் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றார். கே.வி.எஸ். செட்டி தெருவில் கடந்த 3 நாட்களாக பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சென்று கொண்டு இருந்தது. உடனடியாக குடிநீர் பைப்லைனை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து கமிஷனர் ரத்தினசாமி கூறியதாவது: வேலூர் மாநகராட்சி பகுதியில் மாடுகள் சுற்றித்திரிந்து வருவதாக புகார்கள் வந்துள்ளது. மாடுகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளில் கட்டி வைத்துள்ளனர். இதனால் அந்த பேரிகார்டு சேதம் அடைந்து விடுகிறது. மேலும் மாடுகளால் அசுத்தம் ஏற்படுகிறது. மாநகராட்சியில் உள்ள தெருக்கள், சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குப்பைகளை மாநகராட்சி ஊழியர்களே நேரடியாக அனைத்து இடங்களிலும் பெற்று வருகின்றனர். காந்திரோடு பகுதியில் லாட்ஜ்களில் இருந்து குப்பைகளை இரவு நேரங்களில் தெருக்களில் கொட்டுகின்றனர். பிளாஸ்டிக் குப்பை உட்பட அனைத்து விதமான குப்பைகளை தனியாக பிரித்து கொடுக்க வேண்டும் என்று லாட்ஜ் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால் அவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: